மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள அரசு சட்டக் கல்லூரி மாணவர்களிடையே லவ் ஜிஹாத் மற்றும் பிற சமூக விரோதக் கருத்துக்களை ஊக்குவிக்கும் சில சட்டக் கல்லூரி ஆசிரியர்களுக்கு எதிராக, ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினர் கடந்த வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த குறிப்பிட்ட பேராசிரியர்கள் மத அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கின்றனர், புதிய மாணவர்களின் மனதில் நாட்டின் அரசு மற்றும் ராணுவத்தைப் பற்றிய எதிர்மறையான விஷயங்களை விதைக்கின்றனர், லவ் ஜிஹாத் மற்றும் மாட்டிறைச்சி சாப்பிட மாணவர்களை ஊக்குவிக்கின்றனர், இந்த பேராசிரியர்கள், மாணவர்களை உள்ளடக்கிய பல்வேறு மெசேஜிங் குழுக்களை உருவாக்கி அவற்றில் வெறுப்பு செய்திகளை பரப்புகின்றனர். தங்களது வகுப்புகளில் மதத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள், பாடங்களைப் பற்றி விவாதிப்பதில்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கல்லூரியின் முதல்வர், முஸ்லிம் ஆசிரியர்கள் மற்றும் இச்சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தொழுகை நடத்த மசூதிக்கு செல்கின்றனர். அப்போது பாடங்கள் எடுக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இந்த போராட்டங்களைத் தொடர்ந்து, ஏ.பி.வி.பி உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர் இனாமூர் ரஹ்மானை சந்தித்து புகார் அளித்தனர். இதையடுத்து குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர்கள் மிர்சா மோசிஸ் பெக், அமீக் கோகர், சுஹைல் அகமது வானி, மிலிந்த் குமார் கௌதம், ஃபெரோஸ் அகமது மீர் மற்றும் பூர்ணிமா பைஸ் ஆகிய நான்கு முஸ்லிம் பேராசிரியர்கள் உட்பட ஆறு பேர் ஐந்து நாட்களுக்கு கல்விப் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். கல்லூரி முதல்வர் டாக்டர் இனமுர் ரஹ்மான், “எங்கள் கல்லூரியில் கூறப்படும் இத்தகைய குற்றச்சாட்டுகள் நடக்கும் சூழல் இல்லை. எனினும், ஏ.பி.வி.பியின் இந்த புகார் தீவிரமானது, அதை ஓய்வு பெற்ற மாவட்ட நீதிமன்ற நீதிபதி மூலம் விசாரிக்க முடிவு செய்துள்ளோம். விசாரணை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 6 பேராசிரியர்கள் ஐந்து நாட்களுக்கு கல்விப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு முஸ்லிம் பேராசிரியர்களும் அடங்குவர். இரண்டு ஹிந்து ஆசிரியர்களுக்கு எதிராக ஏ.பி.வி.பி அமைப்பினர், ஒழுக்கமின்மை, மாணவர்களுடன் சரியாகப் பேசவில்லை என்பது உள்ளிட்ட புகார்களை அளித்துள்ளனர்” என கூறினார்.