திறமையின்மையை மூடிமறைக்கும் தி.மு.க

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்திற்கு தமிழக அரசு அரசாணையே பிறப்பிக்கவில்லை என்பதை சட்டத்துறை அமைச்சரான ரகுபதி பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில், “இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த திறனற்ற தி.மு.க அரசின் சட்டத்துறை அமைச்சரான ரகுபதி, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார். அரசாணை பிறப்பிக்காமல் அவசர சட்டம் இயற்றி என்ன பயன் என்று தமிழக பா.ஜ.க ஏற்கனவே முன் வைத்த கேள்வியை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறோம். தங்கள் திறனற்ற தன்மையை மறைக்க பொய்களைப் பரப்பி மாண்புமிகு தமிழக ஆளுநரின் மேல் பழியை போட்டுக் கொண்டிருந்த தி.மு.கவினர் வெட்கி தலை குனிய வேண்டும். அரசின் திறனின்மை மற்றும் மெத்தன போக்கினால் அவசர சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் எட்டு உயிர்கள் பலியானதற்கு தமிழக முதல்வரே பொறுப்பேற்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் ஒரு அவசர சட்டத்தை கடந்த அக்டோபர் 3ம் தேதி தமிழக அரசு நிறைவேற்றியது. இதற்கு, அக்டோபர் 7ம் தேதி ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். அந்த வகையில், பிறகு அது அக்டோபர் 19ல் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கடந்த நவம்பர் 17ல் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால், அதனை தமிழக அரசு செய்யவேயில்லை. இதன் காரணமாகவே அந்த சட்டம் காலாவதியானது. ஆனால், இதனையெல்லாம், மறைத்து விட்டு வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் ஆளுநர் மீது தி.மு.கவினர் வீண் பழி சுமத்தினர்.

இதனையடுத்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அப்போதே “அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிய பிறகு, தமிழக அரசு அரசாணை ஏன் பிறப்பிக்கவில்லை? அவசர சட்டத்தை நடைமுறைப்படுத்த, “தமிழ்நாடு கேமிங் அதாரிட்டி” உருவாக்கப்பட வேண்டும். இன்றுவரை உருவானதா? அக்டோபர் 8ம் தேதி முதல் நவம்பர் 27ம் தேதி வரை ஆன்லைன் சூதாட்டத்தினால் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, மாநில அரசு அரசாணையை அறிவிக்கத் தவறியதாலும், அது காலாவதியாகும் வரை காத்திருந்ததாலும், ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தில் இன்றும் தொடர்கிறது” என சில முக்கிய கேள்விகளை தி.மு.க அரசுக்கு முன்வைத்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.