ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ மத்தியப் பிரதேசத்தில் தொடங்கியிருக்கும் நேரத்தில், மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்ஏ’வான உமங் சிங்கர் என்பவரின் மனைவி, அவரின் கணவரின் மீது காவல்துறையில் பாலியல் துன்புறுத்தல் புகாரை அளித்துள்ளார். இதன்மீது கவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே உமங் சிங்கர் மனைவி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா, கமல் நாத் உள்ளிட்டோருக்கும் இதுகுறித்து கடிதம் எழுதி நீதி வழங்க கோரியுள்ளார். அக்கடிதத்தில் “எனது கணவருக்கு பெண்களை மறைந்திருந்து வீடியோ எடுத்து, அவர்களை பிளாக்மெயில் செய்யும் கொடூர பாலியல் பழக்கம் உள்ளது. உமங் சிங்கர் எனக்கு பலமுறை அநீதி இழைத்தார். தற்போது அவர் எல்லா வரம்புகளையும் தாண்டிவிட்டார். அவர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரியாக நடந்துகொள்கிறார். அவருக்கு எதிராக பலமுறை புகார் கொடுத்துள்ளேன். ஆனால், காவல்துறையினர் அந்த புகாரை விசாரணைக்கு எடுக்கவில்லை. இது எனது தனிப்பட்ட விஷயம் என்பதால் இந்த தகவல் பொதுவில் வருவதை நான் விரும்பவில்லை, ஆனால் எனக்கு வேறு வழியும் தெரியவில்லை. இனி பொறுத்துக்கொள்ள முடியாது. எனது கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் காங்கிரசில் இருப்பதால் இதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்பினேன்” என கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து பேசிய அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், “காங்கிரஸ் கட்சியினர் தங்கள் தலைவரை தண்டிக்காமல், அரசியலாக பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் பா.ஜ.கவுக்கு எந்த தொடர்பும் இல்லை. சட்டம் தன் கடமையை செய்யும். மத்தியப் பிரதேசத்தில் பெண்களுக்குத் தொல்லை கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.