மாதந்தோறும் விழிப்புணர்வு முகாம்கள்

மத்திய அரசு, யு.பி.ஐ, இணையவழி நிதிப்பரிமாற்றம், செயலிகள், ருபே அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு பரிவர்த்தனைகளை அதிக அளவில் ஊக்குவித்து வருகிறது. ஆனால், கிராமப்புற மக்களிடம் வங்கிகளில் மேற்கொள்ளப்படும் மின்னணுப் பரிவர்த்தனைகள் குறித்து இன்னும் போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படவில்லை. குறிப்பாக, டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுத்தல், வங்கி இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள், ஆர்.டி.ஜிஎ.ஸ், நெப்ட், இம்ப்ஸ் உள்ளிட்ட பணப் பரிவர்த்தனைகள், செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை குறித்து கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே அதிகமாக விழிப்புணர்வு ஏற்படவில்லை. மேலும், ஆன்லைன் மோசடிகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. எனவே, இதற்குத் தீர்வுகாணும் வகையிலும் மோசடிகளைத் தடுத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் கிராமப் பகுதிகளில் நிதி கல்வியறிவு மற்றும் கடன் ஆலோசனை மையங்களை அமைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்காக, இந்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், பல இடங்களில் இந்த விழிப்புணர்வு முகாம்கள் சரியாக நடத்தப்படுவதில்லை என்று தொடர் புகார்கள் எழுந்ததையடுத்து, மாதந்தோறும் கட்டாயம் 2 விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.