கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்ட முகமது ஷரீக் குறித்த விசாரணையில், அவர் தனது முஸ்லிம் மத அடையாளத்தை மறைத்து ஒரு ஹிந்துவாக காட்டி ஏமாற்ற முயன்றது, போலி ஆதார் அட்டை மூலம் வீடு வாடகைக்கு எடுத்தது, போலி பெயரில் சிம் கார்டு வாங்கியது, ஷிமோகாவில் குண்டை வெடிக்க செய்து ஒத்திகையில் ஈடுபட்டது, தேசியக்கொடியை எரித்தது, ஹிந்து அமைப்பினரை தாக்கியது, கோவை, மதுரை, கேரளா என பல இடங்களுக்கு ரகசியமாக பயணித்தது, பயங்கரவாதிகளுடனான தொடர்பு என அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மங்களூரு காவல்துறையினர், 7 தனிப்படைகளை அமைத்து மைசூரு, ஷிமோகா, கோவை, நாகர்கோவில், கோழிக்கோடு, கொச்சி உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, கர்நாடகா டி.ஜி.பி பிரவீன் சூட், மங்களூரு மாநகர காவல் ஆணையர் சசிகுமார் உள்ளிட்டோர் மங்களூருவில் குண்டுவெடித்த நகோரி சாலையில் ஆய்வு செய்தனர். பின்னர், இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் பூஜாரியை அமைச்சர் அரக ஞானேந்திரா சந்தித்து நலம் விசாரித்தார். அவரது சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ‘‘ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளால் ஈர்க்கப்பட்ட முகமது ஷரீக், கடந்த சில ஆண்டுகளாகவே பயங்கரவாத சதி செயலை அரங்கேற்றும் எண்ணத்துடன் செயல்பட்டுள்ளார். விரைவில் இவ்வழக்கு என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்படும்’’ என்றார்.
பெங்களூரு தெற்கு தொகுதியின் எம்.பி’யான பா.ஜ.கவை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா, ‘‘கடந்த சில ஆண்டுகளாகவே மங்களூருவில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இங்குள்ள பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மங்களூருவில் என்.ஐ.ஏ அமைப்பின் கிளையை திறக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் மங்களூரு குக்கர் குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் (ஐ.ஆ.ர்சி) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக கர்நாடகா காவல்துறை தெரிவித்துள்ளது. ‘இலக்கை அடையவில்லை என்றாலும் இதை வெற்றியாக கருதுகிறோம்’ என குறிப்பிட்டு அந்த அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளனர்.