கோல்டுமேன் சாச்சஸ் கணிப்பு

பாரதப் பொருளாதாரம் உலகிலேயே வேகமாக வளர்ச்சி அடையும் என்று கூறப்பட்ட நிலையில், அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அடுத்தடுத்து அறிவிக்கப்பட்ட வட்டி விகித உயர்வுகள், கொரோனா தொற்றுக் காலத்திற்குப் பின்பு இருந்து சாதகமான வர்த்தகச் சூழ்நிலைகள் அனைத்தும் குறைந்துவரும் நிலையில் பாரதத்தின் பொருளாதார வளர்ச்சி அளவீடு பாதிக்கப்பட்டு உள்ளது எனக் கோல்டுமேன் சாச்சஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாரதத்தின் மொத்த ஜி.டி.பி, 2022ல் 6.9 சதவீதமாகவும் 2023ம் ஆண்டில் 5.9 சதவீதமாகவும் இருக்கும் என கோல்மேன் சாச்சஸ் பொருளாதார வல்லுனர் ஆண்ட்ரூ டில்டன் தலைமையிலான குழு கணித்துள்ளது. வட்டி விகித உயர்வால் பணப்புழக்கம் குறைந்து உள்நாட்டுத் தேவை பாதிக்கப்படுவதால் 2023ன் முதல் பாதி மந்தமாக இருக்கும். இரண்டாம் பாதியில், வளர்ச்சி கரணிகள் உலகளவில் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பாரதத்தில் ஏற்றுமதி அதிகரிப்பு, முதலீடுகள் அதிகரிப்புகள் இருக்க வாய்ப்புகள் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, ரிசர்வ் வங்கி, 2023ம் ஆண்டில் பாரதத்தின் பொருளாதாரம் 7 சதவீதமாக இருக்கும் என கூறியுள்ளது. அதேசமயம், கிரிசில் நிறுவனம் இதனை 7 சதவீதமாகவும், கோல்டுமேன் சாக்ஸ் 5.9 சதவீதமாகவும், மூடிஸ் 4.8 சதவீதமாகவும் மதிப்பிட்டுள்ளன என்பது நினைவு கூரத்தகது. கொரோனா தொற்றுப் பாதிப்பு குறைந்து உலக நாடுகளின் பொருளாதாரம், வளர்ச்சி பாதையில் பயணிக்கத் துவங்கியபோது ஏற்பட்ட ரஷ்யா உக்ரைன் போர் மீண்டும் உலக நாடுகளுக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், பணவீக்கம் அதிகரித்தது, அதைத் தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டதால் அனைத்து நாடுகளிலும் பொருளாதார மந்தநிலை உருவாகி வருகிறது. எனினும் பாரதம் இதில் இன்றுவரை மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது என்பதால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பொருளாதார மந்தநிலையின் தாக்கம் பாரதத்தை அதிகம் பாதிக்காது என வல்லுனர்கள் கருதுகின்றனர்.