கரூர் கம்பெனியின் கட்டாய வசூல்

தி.மு.க அமைச்சர் செந்தில்பாலாஜியின் பொறுப்பில் இருக்கும் அரசு டாஸ்மாக் மதுபானத் துறையின் கீழ் உள்ள மதுக் கடைகளில் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் ‘கரூர் கம்பெனி’ என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாநகரம், நகரம், பேரூராட்சி, கிராமம் என டாஸ்மாக் கடைகளை வகைப்படுத்தி அந்த கடைகளின் விற்பனையைப் பொறுத்து கடைக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை மாதந்தோறும் கப்பம் வசூல் செய்வதாக குற்றாச்சாட்டு எழுந்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி, இதை மறுத்திருந்தார். ஆனால், கடந்த தீபாவளி சமயத்தில் டாஸ்மாக் கடைகளில் சிலர் வசூலில் ஈடுபடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அந்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்த்தன. எனினும், இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல செந்தில்பாலாஜி பேசிவந்தார். இந்நிலையில், கரூர் கம்பெனி என்ற பெயரில் டாஸ்மாக் கடைகளில் கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபடுவதை கண்டித்து டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து பேசிய டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன், “கரூர் கம்பெனி என்ற பெயரில் ஆளும்கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்கத்தினர் டாஸ்மாக் கடைகளில் மாதந்தோறும் 10,000 ரூபாய் 40,000 ரூபாய் கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர். பணியாளர்களை அலைகழித்து துன்பப்படுத்துகின்றனர். எனவே, இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு டாஸ்மாக் கடைகளில் நடக்கும் கட்டாய வசூலை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.