டெல்லியில் பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் பேசுகையில், “பயங்கரவாதம் மனிதகுலத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தல். நமது குடிமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில், பயங்கரவாதம் வீட்டுக்கு வரும் வரை காத்திருக்க முடியாது. அதன் ஆதரவு வலையமைப்புகளை அறுத்தெரிய வேண்டும். பயங்கரவாதத்தால் ஒரு தாக்குதல் நிகழ்ந்தாலும், அது பல பயங்கரங்களுக்கு வழிவகுக்கும். எனவே, பயங்கரவாதத்தை அடியோடு வேரறுக்கும் வரை ஓயக்கூடாது. அரசியல், சித்தாந்தம் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாக பயங்கரவாதத்திற்கு உதவும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அத்தகைய நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். தொழில்நுட்பத்தை பயங்கரவாதத்திற்கு எதிராக பயன்படுத்த வேண்டும். பணமோசடியை கருத்தில் கொண்டு பயங்கரவாதத்திற்கு அர்ப்பணிக்கப்படும் அனைத்து நிதிப்பின்னலையும் தகர்த்தெரிய வேண்டும். அதில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை தேவை. பயங்கரவாதத்தை எதிர்த்து பாரதம் எப்போதும் வீரத்துடன் போரிட்டு வருகிறது. வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ பயங்கரவாதத்திற்கு அளிக்கும் அனைத்து வகையான ஆதரவுக்கும் எதிராக உலகம் ஒன்றுபட வேண்டும். போர் இல்லாவிட்டால் அமைதி நிலவும் என்று சர்வதேச அமைப்புகள் நினைக்கக்கூடாது. மறைமுக போர்களும் ஆபத்தானவை. எந்த நாடாக இருந்தாலும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எவருக்கும் ஆதரவு அளிக்கக்கூடாது” என கூறினார். இதைத்தொடர்ந்து, மாநாட்டில் பேசிய தேசிய புலனாய்வு முகமையின் டைரக்டர் ஜெனரல் திங்கர் குப்தா, கடந்த எட்டரை ஆண்டுகளில் பாரதத்தில் பயங்கரவாதத்திற்கு அளிக்கப்படும் நிதி வெகுவாகக் குறைந்துள்ளது என குறிப்பிட்டார்.