கேள்விக்குரியதாகிறதா நாட்டின் பாதுகாப்பு?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, முற்றிலும் தவறானது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், நாட்டு மக்களின் உணர்வைப் புரிந்து கொண்டு செயல்படாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. இந்த சூழலில், சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி (எஸ்.ஜி.பி.சி) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ராஜீவ் காந்தியின் கொலையாளிகளை உச்ச நீதிமன்றம் விடுவித்ததைப் போன்றே ராஜீவ் காந்தி கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் உள்ள சீக்கிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதை போன்று, சீக்கிய கைதிகளுக்காக மாநில மற்றும் மத்திய அரசுகள் ஏன் பரிந்துரைக்கத் தவறின? இந்த பாகுபாடு சீக்கியர்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது. கொலை, கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றச்சாட்டுகள் உள்ள கைதிகள் மீது அரசுகள் கருணை காட்டி விடுவித்த பல முன்னுதாரணங்கள் ஏற்கனவே உள்ளன. ஆனால்,, சீக்கிய கைதிகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது’ என எஸ்.ஜி.பி.சி தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமி, சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

1984 மற்றும் 1991 க்கு இடையில், பாரதத்திலும் லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் ராஜீவ் காந்தியின் மீது பல கொலை முயற்சிகள் நடந்தன. ஆனால், இவை வெற்றி பெறவில்லை. ராஜீவ் காந்தி கொலை தொடர்பான ஜெயின் கமிஷன் அறிக்கையின் தொகுதி 3ல், ஏறத்தாழ 10 முறை சீக்கிய காலிஸ்தானி பயங்கரவாதிகள் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சித்தது, அவர்களுக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து கிடைத்த ஆயுத உதவிகள் போன்ற பல தகவல்கள், விரிவான அறிக்கைகள் இடம் பெற்றுள்ளன. இதனிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில், “25 ஆண்டுகளாக ஏராளமான தமிழக கைதிகள் சிறைகளில் இருக்கிறார்கள், அவர்களை விடுதலை செய்யாதது ஏன்? சந்தேகத்தின்பேரில் சிறையில் இருக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்யாதது ஏன்? முஸ்ளிம் இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா? என கேள்வி எழுப்பியுள்ளார். உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பை தொடர்ந்து எழுந்து வரும் இத்தகைய அபாயகரமான கோரிக்கைகள், நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி வருகின்றன என மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.