கண்காணிப்பு பட்டியலிலிருந்து பாரதம் நீக்கம்

ஒவ்வொரு நாடும் தனது நாணய பரிமாற்றம் மற்றும் அன்னிய செலாவணி அளவீட்டில் வெளிப்படைத் தன்மை உடன் இருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில், அமெரிக்கக் கருவூலத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாணய நடைமுறைகள் மற்றும் மேக்ரோ பொருளாதாரக் கொள்கைகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய முக்கிய வர்த்தகப் பங்காளிகளின் நாணய கண்காணிப்பு பட்டியலிலிருந்து பாரதம் நீக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இப்பட்டியலில் இருந்த இத்தாலி, மெக்சிகோ, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளின் நாணயங்களும் நீக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாரதத்தின் ரூபாய் இடம்பெற்று இருந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமெரிக்கக் கருவூலச் செயலாளர் ஜேனட் யெலன் டெல்லி பேச்சுவார்த்தை நடத்திய நாளில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது இந்த நாணய கண்காணிப்புப் பட்டியலில் சீனா, ஜப்பான், கொரியா, ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தைவான் ஆகிய ஏழு நாடுகள் உள்ளது என்று அமெரிக்கக் கருவூலத் துறை அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், சீனா தனது அன்னிய செலாவணி தரவுகளை வெளியிட தொடர்ந்து மறுத்துவரும் நிலையில், வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருக்கும் காரணத்தால் அமெரிக்கக் கருவூல அமைப்பு சீன நாணயத்தைத் தனது நாணய கண்காணிப்புப் பட்டியலில் தொடர்ந்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் நாணயத்தை ஆய்வு செய்யப் போதுமான தரவுகள் இல்லை. சுவிட்சர்லாந்தும் மூன்று அளவுகோல்களின் வரம்புகளை மீறிய காரணத்தால் அதை கண்காணிக்கப்பட வேண்டிய நடு என்று அறிவித்துள்ளது.