நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் அக்டோபர் மாதத்தில், 7 சதவீதத்துக்கும் கீழ் சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். அக்டோபர் மாதத்துக்கான சில்லரை விலை பணவீக்கம் குறித்த தரவுகள், இன்று வெளியாக உள்ளன. இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், “பாரதத்தின் சில்லறை விலை பணவீக்கம் செப்டம்பரில் 7.41 சதவீதமாக உயர்ந்தது. இது அக்டோபரில் 7 சதவீதத்துக்கும் கீழே குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாத பணவீக்க உயர்வுக்கு, உணவு மற்றும் எரிபொருள் விலை அதிகரித்திருந்தது முக்கிய காரணமாக அமைந்தது. பணவீக்கம் பாரதத்துக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. கடந்த 7 மாதங்களாக, அரசு மற்றும் ரிசர்வ் வங்கி எடுத்து வந்த நடவடிக்கைகளால், அக்டோபர் மாதத்தில், பணவீக்கம் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய பணவீக்க இலக்கான 6 சதவீதத்தை மேலும் அதிகரிக்க தேவையில்லை. 6 சதவீதத்தை தாண்டினால் அது வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக பாதிக்கும். பாரதத்தின் மேக்ரோ பொருளாதார அடிப்படைகள் வலுவாகவும், மீள்தன்மையுடனும் உள்ளது” என கூறியுள்ளார்.