ராஜீவ் கொலையாளிகள் விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதனால், இந்த வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற 6 பேரும் விடுதலை கோர வழிவகை ஏற்படுத்தப்பட்டது.தாங்களும் பேரறிவாளனின் அதேநிலையில் உள்ளதால், தங்களையும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும். மேலும்,இந்த வழக்கில் தங்களை விடுதலை செய்யும் வரை தங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என அந்த ஆறு பேரும் மனு செய்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சிறையில் இருந்துவரும், 6 பேரின் நன்னடத்தை குறித்து தமிழக அரசும், மனுதாரர்கள் தரப்பிலும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த வழக்கில் இருந்து ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனைப் போலவே இந்த 6 பேரும் நிவாரணங்களைப் பெற தகுதியானவர்கள் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.