பாரதம் ஒரு பிரகாசமான புள்ளி

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மும்பையில் நடைபெற்ற அஹிம்சா விஸ்வ பாரதி தேசிய மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பேசிய அமைச்சர், விஷ்வ குருவாக ஆவதற்கான பாரதத்தின் பணியை எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, ஆச்சார்யா டாக்டர். லோகேஷ் முனி மற்றும் அஹிம்சா விஸ்வபாரதியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் பேசுகையில், “துறவிகளும் முனிவர்களும் நமது கடமையை நினைவு படுத்தி, நமது மனதில் ஒரு பொறியை ஏற்றுகின்றனர். சடங்குகளின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையுடன் மதத்தை இணைக்க வேண்டும். தேசப்பற்றை வலியுறுத்தும் இல்லம் தோறும் மூவர்ணக்கொடி போன்ற நிகழ்ச்சிகள் பெரும் வெற்றி பெற்றன. தேசியக் கொடி ஏற்றப்படாத ஒரு வீட்டைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போதைய இருள் சூழ்ந்த உலகில், பாரதம் ஒரு பிரகாசமான புள்ளியாக விளங்குகிறது. நாடு அடைந்து வரும் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு குடிமகனும் சாட்சியாக விளங்குகிறார். நமது குடும்ப விழுமியங்கள், பாரம்பரியம் மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றி, காலனித்துவ மனப்பான்மையைக் கைவிட்டு, மீண்டும் நமது வேர்களுக்குச் செல்லுமாறு பிரதமர் நரேந்திர மோடி தனது ஐந்து உறுதிமொழிகள் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நமது அன்றாட வாழ்க்கையிலும் இந்த உறுதிமொழி நம்மை வழிநடத்திக்கொண்டே இருக்கும். ஒருவர் தன் சுயநலத்தில் அக்கறை கொள்வது போல் சமுதாயத்தையும் பேண வேண்டும் என்ற ஜெயின் மதத்தின் போதனைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. பாரதம் உலகின் குருவாக வேண்டும் என்று குடிமக்கள் முடிவு செய்யும்போது அதைத் தடுக்கும் சக்தி உலகில் இல்லை” என்று கூறினார். இந்நிகழ்வில், ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு, சஞ்சய் கோடாவத் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு அஹிம்சா சர்வதேச விருது 2022 வழங்கப்பட்டது.