மலையாள தொலைக்காட்சி சேனலான ‘மீடியாஒன்’ டிவிக்கு ஒளிபரப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அந்த நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், “பாதுகாப்பு அனுமதியின் அடிப்படையில், ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க மத்திய அரசு மறுக்க முடியாது என்று சேனல் நிர்வாகம் வாதிடுவது மிகவும் தவறானது. பாதுகாப்பு அனுமதிகள் பல அம்சங்களைக் கொண்டிருக்கலாம். அதற்கான பொதுவான உத்தரவை எங்களால் வெளியிட முடியாது. உரிமங்களைப் புதுப்பிக்கும்போது பாதுகாப்பு அனுமதிகளை அரசாங்கம் கருத்தில் கொள்ளக்கூடாது என்று நாங்கள் கூறமுடியாது. எவ்வாறாயினும், இந்த வழக்கின் விசித்திரமான சூழ்நிலைகளை நாம் ஆராயலாம்” என்று கூறி தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்த விசாரணையின் போது மத்திய உள்துறை அமைச்சகம் சமர்ப்பித்த ரகசிய ஆவணத்தை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்தது. மீடியாஒன்னின் பங்குதாரர் முறை மற்றும் வருவாய் பங்கு எவ்வாறு பிரிக்கப்படுகிறது என்பது குறித்தும் உச்சநீதிமன்றம் விசாரித்தது. முன்னதாக, மீடியாஒன் டிவியின் 10 ஆண்டு உரிமம் செப்டம்பர் 29, 2021 அன்று காலாவதியானது. அந்நிறுவனம் கடந்த ஆண்டு மே மாதம் உரிமத்தின் நீட்டிப்புக்கு விண்ணப்பித்தது. எனினும், கடந்த பிப்ரவரியில், மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையின் பேரில், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு மீடியாஒன் டிவிக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தடை விதித்தது. இந்த தடையை கேரள உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து சேனலின் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது பல்வேறு புலனாய்வு அமைப்புகள் தாக்கல் செய்த ரகசிய தகவல்கள், அதன் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதேபோல 2020ம் ஆண்டில், ஹிந்து விரோத டெல்லி கலவரத்தை ஒளிபரப்பியதற்காக மீடியாஒன் 48 மணி நேரம் தடை செய்யப்பட்டது. அடிப்படைவாத முஸ்லிம் அமைப்பான ஜமாத் இ இஸ்லாமிக்கு சொந்தமானது இந்த சேனல். ஜூலை 2021ல், கேரளாவைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர், ஜமாத் இ இஸ்லாமி என்ற மதவாத அமைப்பு பாரதத்தை முஸ்லிம் நாடாக மாற்ற, சௌதி அரேபிய பல்கலைக் கழகங்களிலிருந்து எவ்வாறு நிதி பெற்றது என்பதை வெளிப்படுத்தினார். புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பிற்கு நிதியுதவி செய்ததாக சந்தேகத்தின் பேரில், மத்திய அரசு பிப்ரவரி 28, 2019 அன்று அந்த அமைப்பை தடை செய்தது.