மிகச்சிறந்த சமூக செயற்பாட்டாளரும் ஸ்ரீ ஷிவ்பிரதிஷ்டானின் தலைவருமான சம்பாஜி பிடே குருஜியிடம், சாம் டிவியை சேர்ந்த பெண் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டபோது அவரிடம், “நீ நெற்றியில் முதலில் பொட்டு வைத்து வா. பிறகு உன்னிடம் பேசுகிறேன். ஒவ்வொரு பெண்ணும் பாரதமாதாவின் வடிவம் என்று நான் நம்புகிறேன். பாரதமாதா விதவை அல்ல. எனவே பொட்டு வைத்துக்கொள். நான் உன்னிடம் பேசுகிறேன்” என்றார். இதனை இடதுசாரி மற்றும் தாராளவாத பத்திரிகையாளர்கள் சமூகம், பெரும் சர்ச்சையாக்கியது. பெண்களையும் பத்திரிகையையும் அவமதித்ததாக அவர்கள் கூக்குரலிட்டனர். ஒரு பெண்னை பாரதமாதாவாக கண்டு மரியாதை செலுத்துவது தவறா அல்லது பொட்டு வைத்துக்கொள்ள சொல்வது தவறா? இது பெண்களை எவ்விதத்தில் அவமானப்படுத்தும் செயல்? என அவர்கள் விளக்கவில்லை.
பிரீ பிரஸ் ஜர்னல் அவரை ‘பாலியல்வாதி’ என்று முத்திரை குத்தியது. பல ஹிந்து விரோத ஊடகங்கள் வழக்கம்போல அவர் மீது ‘ஹிந்துத்துவா’ முத்திரையை குத்தின. இந்தியன் எக்ஸ்பிரஸ், இது ஒரு செயல்பாட்டாளர், தலைவருக்கு பொருத்தமானது அல்ல, வலதுசாரி தலைவர் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர் என்பது போன்ற சொற்களை பயன்படுத்தியது. பிடே குருஜியின் ஆழமான ஹிந்து தர்ம பிடிப்பு காரணமாக அவரைக் குறிவைக்க பத்திரிகைகள் இந்த பிரச்சினையும் ஊதிப் பெரிதாக்கி வருகின்றன. மேலும், அவர் ஹிந்துக்களுக்காக களத்தில் இறங்கி, ஹிந்துக் கலாச்சாரத்தைக் காக்கும் தலைவர்களில் ஒருவர் என்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
“ஒரு பெண் நிருபருக்கு அவர் பொட்டு வைக்காததால் பேட்டி கொடுக்க மறுத்துவிட்டீர்கள். ஒரு பெண்ணின் வேலை என்ன, அவள் என்ன உடுத்துகிறாள் என்பது அவளை வரையறுக்கவில்லை. உங்கள் கருத்து மகாராஷ்டிரா மக்களை கொதிப்படைய செய்துள்ளது. இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்” என மாநில மகளிர் ஆணையம் பிடே குருஜிக்கு நோட்டீஸ் அனுப்பியது. காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிடன் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரூபாலி சகாங்கர் தலைமையில் இந்த ஆணையம் தற்போது செயல்படுகிறது என்பதால் அது அவருக்கு நோட்டீஸ் அனுப்பியதில் எந்த ஆச்சரியம் ஏதுமில்லை. இதே மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் சமீபத்தில் 13 வயது மைனர் பெண் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது இதே ரூபாலி சகாங்கர் என்ன நடவடிக்கை எடுத்தார், நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக சிவசேனா தலைவர்கள் ஆபாசமாக பேசியபோது, துஷ்பிரயோகம் செய்தபோது என்ன செய்தார்? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.
ஹிந்து துவேஷ சகாங்கரின் பாரபட்சமான செயல்பாடு இதில் தெளிவாகத் தெரிகிறது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அதன் தலைவர்கள் பலர், பத்திரிகையாளருக்கு ஆதரவாக வந்தனர். காங்கிரசும் அதன் பங்கிற்கு ஹிந்து வெறுப்பை உமிழ்ந்தது. வழக்கமான ‘மனுஸ்மிருதி’ மற்றும் ‘பிராமண ஆணாதிக்கம்’ போன்றவற்றைப் பயன்படுத்தி பிடே குருஜியை குறிவைத்தது.
இதற்கிடையே, குருஜியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு, இந்த தாராளவாத கும்பலைக் கண்டித்து ஒரு ட்வீட்டை வெளியிட்டது. அதில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதை கட்டாயப்படுத்துவதை அவர்கள் ஆதரிப்பது குறித்து கேள்வி எழுப்பியது. மகாராஷ்டிர துணை முதல்வரின் மனைவியான அம்ருதா பட்னாவிஸின் கூற்றும் ஏமாற்றமளிக்கிறது. “பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் கட்டளையிடக்கூடாது” என்று அவர் கருத்து தெரிவித்தார். பிடே குருஜியின் கூற்றை அவர் தெளிவாகக் கேட்டு புரிந்துகொண்டுதான் இதனை கூறினாரா அல்லது இந்த தாராளவாதிகளிடம் நல்ல பெயரைப் பெறுவதற்காக இப்படியொரு கருத்தை முன்வைத்தாரா என்ற சந்தேகம் எழுகிறது.
எம்.எஸ்.சியில் தங்கப் பதக்கத்துடன் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர் சம்பாஜி பிடே குருஜி. 1980களில், சத்ரபதி சிவாஜி மகாராஜின் கோட்டைகளைப் பாதுகாப்பதிலும், இளைஞர்களை பாதுகாப்பு முயற்சிகளில் பங்கேற்பதற்காகவும் தனது பங்களிப்பைத் தொடர, புனேவின் பெர்குசன் கல்லூரியில் பேராசிரியராக இருந்த தனது வேலையை விட்டு வந்தவர். சத்ரபதியின் பெயரை அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்தும் பலர், குருஜி செய்துள்ள செயல்களில் ஒரு சிறிய பகுதியைகூட இதுவரை செய்யவில்லை.
“கடந்த 40 வருடங்களாக அவர் இங்கு வசிக்கிறார். அவர் பயணம் செய்ய பழைய சைக்கிளைப் பயன்படுத்துகிறார், வெறுங்காலுடன் நடந்து செல்கிறார். அவரிடம் புத்தகங்கள் மற்றும் படுத்துக்கொள்ள ஒரு சணல் சாக்கு, தலையணையாக பயன்படுத்த ஒரு துவாலையை தவிர வேறு உடமைகள் இல்லை” என்று அவரது பக்கத்து வீட்டுக்காரரான வைஷாலி பாபட் கூறிய செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியாவே ஒருமுறை வெளியிட்டுள்ளது.
அலுவலகங்களில் ஹிந்து தர்ம முறையிலான விழாக்களை நிறுத்தும் மகாராஷ்டிர மாநில அரசின் முடிவு குறித்து பேசிய பிடே, பாரதம் ஹிந்துக்களுக்கு சொந்தமானது என்பதால் இதுபோன்ற நடவடிக்கையால் தான் புண்படுத்தப்பட்டதாக கூறினார். ஹிந்து நாகரீகத்தை உலகம் முழுவதும் பின்பற்ற வேண்டிய நேரத்தில், மதச்சார்பின்மையை பின்பற்றுவது நாட்டிற்கு கேடு விளைவிக்கும் என்கிறார். சம்பாஜி பிடே குருஜியின் கருத்துப்படி சத்ரபதி சிவாஜியின் கொள்கைகளின்படி வாழ்வதுதான் ஹிந்துத்துவம். சிவாஜி மகாராஜ் மற்றும் ஷம்பாஜி மகராஜ் ஆகியோரின் கொள்கைகளை ஹிந்து சமுதாயம் பின்பற்ற வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதுதான் ஒவ்வொரு ஹிந்துவின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.