கோவை கார் வெடிகுண்டு பயங்கரவாத சம்பவம் தொடர்பாக கோயம்புத்தூரில் சந்தேகத்துக்கு உரியவர்கள் என 900 பேரை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்த பயங்கரவாத முயற்சி நடைபெற்றதில் இருந்து தற்போது வரை தமிழகம் முழுவதும் 137 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கோவையில் மட்டும் எஸ்.டி.பி.ஐ. மற்றும் த.மு.மு.க. அமைப்பின் பிரமுகர்கள் வீடு உள்ள 18 இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ இயக்கத்தின் அனுதாபிகள், ஆதரவாளர்கள் உட்பட சந்தேகத்துக்கு உரியவர்கள் என 900 பேரை காவல்துறை கண்டறிந்து பட்டியல் தயாரித்துள்ளது. இவர்கள் அனைவரும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்த பட்டியல் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதைத்தவிர பயங்கரவாத முயற்சியில் ஈடுபட்டு உயிரிழந்த ஜமேஷா முபின், அவனுடன் இந்த சதித்திட்டத்தில் பங்கெடுத்ததாக கைது செய்யப்பட்ட அவனது கூட்டாளிகள் 6 பேர்களின் அலைபேசிகள், இணைய முகவரிகள், சமூக ஊடகப் பதிவுகள், பணப்பரிமாற்றங்கள், வங்கி தகவல்கள் உள்ளிட்ட அனைத்தையும் காவல்துறையும் என்.ஐ.ஏ அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.