மத்திய உள்துறை அமைச்சகம், குஜராத்தின் மெஹ்சானா மற்றும் ஆனந்த் மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்களுக்கு 1955ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் கீழ் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமைச் சான்றிதழை வழங்க அனுமதி அளித்துள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அகமதாபாத் ஆட்சியர் அலுவலகத்தில் குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவியிடம் இருந்து 40 பாகிஸ்தானிய ஹிந்துக்கள் இந்திய குடியுரிமைச் சான்றிதழைப் பெற்றனர். 2017 முதல், குஜராத்தி மாவட்டம் அகமதாபாத் 1,032 பாகிஸ்தானிய சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. தற்போதுள்ள சட்டங்களின்படி, எட்டு வெவ்வேறு அடிப்படையில் ஒரு தனிநபருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படலாம். இந்த அறிவிப்புக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 க்கும் எந்த தொடர்பும் இல்லை. அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.