கருப்புப் பணத்தை அனுப்பும் ஆம் ஆத்மி

குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியினர், ஹவாலா மற்றும் அங்காடியா போன்ற சட்டவிரோதமான வழிகளில் கருப்புப் பணத்தை அனுப்புவதாக அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பர்தோலியின் ஆம் ஆத்மி வேட்பாளர் ராஜேந்திர சோலங்கி, ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி அலுவலகத்தில் இருந்து இத்தகைய பணம் பெற்றதை ஒப்புக்கொண்டதையும் சுட்டிக்காட்டினார். இந்தப் பணம் எங்கிருந்து வந்தது, அவர்கள் குஜராத்தில் அமைதியின்மையைத் தூண்ட நினைக்கிறார்களா? என கேள்வியெழுப்பினார். முன்னதாக, சூரத்தில் உள்ள பர்தோலி தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ராஜேந்திர சோலங்கியின் காரில் இருந்து கடந்த வியாழக்கிழமை ரூ. 20 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில், பஞ்சாபிலிருந்து டெல்லி மற்றும் குஜராத் வரையிலான இந்த பணப் பரிமாற்றப் பாதையை காவல்துறையினர் கண்டறிந்தனர். அங்காடியாக்களிடம் இருந்து கையால் எழுதப்பட்ட குறிப்புகளையும் காவல்துறையினர் கைப்பற்றினர். ஆர். ஜெயின் என்ற நபர் மூலம் இந்த பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுவாரசியமாக, ஆம் ஆத்மி வேட்பாளர் ராஜேந்திர சோலங்கி முதலில் கைப்பற்றப்பட்ட பணம் தனக்கு சொந்தமானது என்று புகார் அளித்தார். ஆனால் பின்னர் அவர் அதை மறுத்தார். “இந்தப் பணம் எனக்குச் சொந்தமில்லை; தேர்தல் செலவுக்காக டெல்லியில் இருந்து ஆம் ஆத்மி கட்சியால் அனுப்பப்பட்டது. கைதுசெய்யப்பட்ட பராசரர் என் டிரைவர் அல்ல. அவர் டெல்லியில் இருந்து அனுப்பப்பட்ட ஆம் ஆத்மி கட்சிக்காரர். எனக்கு அவர் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆம் ஆத்மி கட்சியின் செலவுகளை அவர் நிர்வகிப்பார் என எனக்கு கூறப்பட்டது” என்று கூறி பின் வாங்கினார். இந்த பணத்தின் ஆதாரம் குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹவாலா என்பது என்ன என்று பொதுவாக அனைவருக்கும் தெரியும். அது என்ன அங்காடியா? அங்கடியா அமைப்பு என்பது பரஸ்பர நம்பிக்கையில் செயல்படும் அதிகாரப்பூர்வமற்ற, சட்டவிரோத கூரியர் மற்றும் வங்கி சேவையாகும். வணிகர்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பரிமாற்றத்திற்கு இடைத்தரகர்களாக இந்த அமைப்பு செயல்படுகிறது. அவர்களின் முதன்மை இயக்க பகுதியாக மும்பை மற்றும் குஜராத் உள்ளது. வியாபாரம் செய்யும்போது பார்சலில் உள்ளவற்றைத் தெரிவிக்க ஜோகிம் மற்றும் ஜெவார் போன்ற குறியீட்டு வார்த்தைகளை இவர்கள் பயன்படுத்துகிறார்கள். மும்பை மற்றும் குஜராத் வணிகர்கள், பணம், நகைகள் மற்றும் வைரங்களை மாற்றுவதற்கு இந்த சட்டவிரோத வழியை பயன்படுத்துகின்றனர். இந்த அங்காடியாக்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் 24 மணி நேரத்திற்குள் அவற்றை டெலிவரி செய்கின்றனர்.