அண்ணாமலை பதில்

தமிழக காவல் துறை சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து விசாரணை நடந்த கொண்டிருக்கும்போதே, பல கருத்துகளைக் கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார். வழக்கை தாமதமாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு அனுப்பியதாக அண்ணாமலை கூறுவது தவறு. மாநில அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில், குண்டு வெடிப்பு நடக்கப் போவதாக முன்கூட்டியே எச்சரித்ததாகவும், காவல் துறை அதை அலட்சியப்படுத்தியதாகவும் ஒரு பொய் பிம்பத்தை எற்படுத்த முயல்கிறார். இது போன்ற உண்மையில்லாத மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி தமிழக காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம்” என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது. இதற்கு பதில் அளித்துள்ள அண்ணாமலை, “தமிழக காவல்துறை இன்று வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும். காவல்துறையில் பணிபுரியும் சகோதர சகோதரிகள் மீது எங்களுக்கு பெருமதிப்பும் மரியாதையும் உள்ளது. இதுவரை நாங்கள் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே ஆனால் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள காவல்துறையிலிருந்து பொதுவான ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார்கள். காவல்துறையின் மாண்பை குறைத்து விட்டதாக என் மீது குற்றச்சாட்டு சுமத்துவதற்கு பதிலாக, இது போன்ற தீவிரவாத சம்பவங்கள் எவ்வாறு நடந்தது என்பதனை அவர்கள் ஆராய வேண்டும். பல பெருமைகளுக்கு பெயர் போன தமிழக காவல் துறையில் அரசியலைப் புகுத்தி சிறுமைப்படுத்துவது யார் என்று மக்கள் அறிவர்” என தெரிவித்துள்ளார்.