பாரதத்தில் உயிர் தியாகம் செய்த காவல்துறையினரின் நினைவாகவும் அவர்களது உயிர் தியாகத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அக்டோபர் 21ல் தேசிய காவல்துறை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. டெல்லயில் உள்ள புதுப்பிக்கப்பட்ட தேசிய காவல்துறை நினைவகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினார். அப்போது காவல்துறையினர் மத்தியில் பேசிய அமித்ஷா, “கொரோனா பெருந்தொற்றின் போது, காவல்துறையினரின் பணி முக்கியமானது. உள்நாட்டு பாதுகாப்பில் நேர்மறையான மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம், வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர், நக்சல் பாதிப்பு மாநிலங்களில் வன்முறைகள், பயங்கரவாதங்களை தடுக்க ஆயுதப்படைகளுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது, இளைஞர்களின் வளர்ச்சிக்காக அவர்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதிகளில் வன்முறைகள் 70 சதவீதம் குறைந்துள்ளது. காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் மீது கல் எறிந்தவர்கள் தற்போது, பஞ்சாயத்து உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் மாறியுள்ளனர். நக்சல் பாதித்த பகுதிகளில் பள்ளிகளில் தேசிய கீதம் பாடப்படுகிறது, தேசியக்கொடி ஏற்றப்படுகிறது. முன்பு கல் எறிந்தவர்கள், தற்போது அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களில் பணியாற்றுகின்றனர். பிரதமர் மோடியின் கொள்கையின் கீழ், உள்நாட்டு பாதுகாப்புக்காக ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. துணை ராணுவம் மற்றும் காவல்துறையினரின் தியாகத்தால், நாடு வளர்ச்சி பாதையில் நடை போடுகிறது” என்று பேசினார்.