விதிமுறைகளை வகுக்க வேண்டும்

பெண் வழக்கறிஞர், நீதிபதிக்கு எதிராக, சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டது தொடர்பான வழக்கில் கைதான, ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரது வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, “அரசியலமைப்பு பிரதிநிதிகள், நீதிபதிகள், பொது மக்களுக்கு எதிராக, அடிப்படை ஆதாரம் இல்லாமல் இழிவாக, அவதுாறாக கருத்துகளை வெளியிடும் சமூக ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தில் கண்ணியமான வாழ்க்கைக்கான உரிமை உள்ளது. அதற்கு எதிர்மறையாக, நேர்மையற்ற கருத்துகளை கூறுவதை அனுமதிக்க முடியாது. மலிவான விளம்பரத்துக்காக, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை களையெடுக்க வேண்டும். இது, சமூக அச்சுறுத்தலை கட்டுப்படுத்த, சமூக ஒழுக்கம், நல்லிணக்கத்தை பராமரிக்க, நீதித்துறை தன் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய நேரம். இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த, சில விதிமுறைகளை வகுக்க வேண்டும்” என கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 2க்கு தள்ளி வைத்தார். முன்னதாக இந்த வழக்கை, கடந்த முறை விசாரித்த நீதிபதி, அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் சமூக ஊடகங்களில் நேர்காணல் நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.