திருச்சியை சேர்ந்த அபிராமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தன் பெற்றோர் இலங்கை குடிமக்கள்; இனக்கலவரம் காரணமாக பாரதம் வந்தனர் எனவும் இங்கேயே பிறந்து 29 ஆண்டுகளாக வசிக்கும் தனக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டது. ஆனால் குடியுரிமை வழங்கப்படவில்லை. இதன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “மனுதாரர் புலம்பெயர்ந்த பெற்றோரின் வழித்தோன்றல் என்றாலும், அவர் பாரதத்தில் பிறந்தவர். அவர் இலங்கை குடிமகளாக இருந்ததில்லை. அவரது கோரிக்கை ஏற்கப்படாவிடில், அவர் நாடற்றவர் என்ற நிலை ஏற்படும். அந்த சூழ்நிலையை தவிர்க்க வேண்டும். மத்திய அரசு சமீபத்தில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்தது. அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு பாரதத்தில் குடியேறிய சிறுபான்மையினர் தற்போது பாரதக் குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இந்த குடியுரிமை சட்டத் திருத்தத்திற்குள் இலங்கை வரவில்லை என்றாலும், அதே கொள்கை அவர்களுக்கும் பொருந்தும். இலங்கை இனக்கலவரத்தில் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள் ஹிந்துத் தமிழர்கள். மனுதாரரின் விண்ணப்பத்தை மத்திய அரசின் இறுதிப் பரிசீலனைக்கு அனுப்ப மாநில அரசுத் தரப்பில் மறுத்திருக்கக்கூடாது. மனுதாரரின் கோரிக்கையை திருச்சி ஆட்சியர், மாநில பொதுத்துறை செயலருக்கு அனுப்ப வேண்டும். அவர் மத்திய உள்துறை செயலாளருக்கு அனுப்ப வேண்டும். அவர் 16 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.