பின்வாங்கிய பாகிஸ்தான் கடற்படை

இந்திய மீனவர்களை பாகிஸ்தானிய கடலோர காவல்படை சிறைபிடித்து சென்ற நிலையில் அவர்களை இந்திய கடலோர காவல்படை மீட்ட செய்தி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 6ம் தேதி குஜராத் மாநிலத்தை சேர்ந்த மீன்பிடி படகான ஹர்சித்தி-5 ஜகாவ் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது உதவி கேட்டு கோரிக்கை விடுத்ததை சற்று தொலைவில் இருந்த இந்திய கடலோர காவல்படை கப்பல் ஐ.சி.ஜி.எஸ் அரிந்த்ஜய் பெற்றது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அரிந்த்ஜய், அங்கு படகின் சிதிலமும், பாகிஸ்தானிய கடலோர காவல்படைக்கு சொந்தமான பி.எம்.எஸ்.எஸ் பராகத் கப்பலின் உயிர்காப்பு மிதவைகளை பற்றி கொண்டு மிதந்து கொண்டிருந்த மீனவர் ஒருவரையும் கண்டு அவரை மீட்டு சிகிச்சை அளித்தது. அந்த மீனவர், பாகிஸ்தானிய கடலோர காவல்படை படகு தங்களது படகின் மீது துப்பாக்கியால் சுட்டும் இருமுறை மோதியும் தாக்குதல் நடத்தி படகை மூழ்கடித்து விட்டு ஆறு சக மீனவர்களை சிறைபிடித்து சென்றதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து, பராகத்தை விரட்டி சென்று பிடித்த நமது வீரர்கள், மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தினர். இதையடுத்து சர்வதேச கடல் எல்லையில் இந்திய மீனவர்களை விடுவித்து விட்டு பாகிஸ்தானிய கப்பல் பின் வாங்கியது. பின்னர், ஏழு மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு ஜகாவ் கொண்டு வரப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தூதரக ரீதியாக இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.