கோயில் நிலத்தில் கல்லூரி பின்னணி என்ன?

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் சென்னை, கொளத்துாரில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்பட்டது. இதேபோல, திண்டுக்கல் மாவட்டத்தில் தொப்பம்பட்டி, நாமக்கல்லில் பரமத்திவேலுார், துாத்துக்குடியின் விளாத்திகுளத்திலும் கோயில்கள் சார்பில் கல்லூரிகள் துவங்கப்பட்டன. இதனை எதிர்த்து ‘இண்டிக் கலெக்டிவ்’ அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர். ரமேஷ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் ‘தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. அதனை தக்கார் தான் நிர்வகிக்கின்றனர். கல்லூரிகளை துவங்க கோயில் நிதியை பயன்படுத்தக் கூடாது’ என கோரப்பட்டது. இந்த வழக்கை கடந்த 2021ல் விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ‘ஏற்கனவே திட்டமிடப்பட்ட நான்கு கல்லூரிகள் தவிர்த்து கோயில்கள் சார்பில் வேறு கல்லூரிகள் துவங்கக் கூடாது. அந்த நான்கு கல்லூரிகளின் செயல்பாடும் வழக்கின் முடிவைப் பொறுத்தே இருக்கும்’ எனஉத்தரவிட்டது. தற்போது நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில் ஆஜரான அரசு தரப்பில் வழக்கறிஞர், “மூன்று கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர் என கூறி கோயில் நிலத்தை கல்லூரிக்கு ஒதுக்கிய விவரங்களை பட்டியலிட்டார். அப்போது, டி.ஆர்.ரமேஷ், ‘ஜனவரியில் பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. மற்ற மதப் பிரிவினரும் அரசு நிலத்தை தங்களுக்கு ஒதுக்க கோருவார்கள். கல்லூரிக்கு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியை பயன்படுத்துவதில் அர்த்தமில்லை. ஸ்டாலின் வெற்றி பெற்ற தொகுதி என்பதால், கோயிலில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள கொளத்தூரில் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது” என்றார். இதையடுத்து நீதிபதிகள், “இளைஞர்களுக்கு கல்வி கற்பிப்பது தான் அரசின் நோக்கம் என்றால் கோயில்களுக்கு பதிலாக உயர் கல்வித் துறை வாயிலாக அரசு நிலத்தில் ஏன் புதிய கல்லூரிகள் துவங்கக் கூடாது? இதன் பின்னணியில் உள்ள கொள்கை என்ன? என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.