தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில், “கட்டாய ஹிந்தியை புகுத்தி, இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர்’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் திடீரென அறிக்கை விட்டுள்ளார். மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில், ஹிந்தியை கட்டாய பாடமாக அனுமதிக்க உத்தரவிட்டுள்ளதாக ஒரு தகவலை மேற்கோள்காட்டி மத்திய அரசை வலியுறுத்தி அறிக்கை விட்டுள்ளார். முதல்வரின் தமிழ் மீதான, இந்த திடீர் கரிசனத்தை எண்ணி சிரிப்பதா; அழுவதா என்றே தெரியவில்லை. எப்போதெல்லாம் தி.மு.க.,வின் மீது மக்களுக்கு அதிருப்தி அலை வீசுகிறதோ; ஊடகங்களுக்கு எதிராக பேச துவங்குகிறதோ; அப்போதெல்லம் மொழி பிரச்னையை எழுப்புவது தி.மு.க.,வின் திராவிட மாடல். சமூக ஊடகத்தின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில், இதுபோல மக்களை அத்தனை எளிதில் ஏமாற்றிவிட முடியாது. 1967ல் இருந்து தொடர்ந்து தி.மு.க ஆட்சி பொறுப்பில் மாறி மாறி இருக்கும் நிலையில், தமிழ் மொழிக்காக அது என்ன செய்திருக்கிறது? ஒரு வார்த்தை கூட படிக்காத, தமிழ் எழுத தெரியாத ஒரு சமூகத்தை உருவாக்கி இருக்கிறது. தமிழில் பேசுவது அவமானம் என்று நினைக்கும் ஒரு சமூகத்தை படைத்திருக்கிறது. மற்ற மாநிலங்களில் எல்லாம் தாய் மொழியை படிக்காமல் எவரும் பள்ளிக் கல்வியை முடிக்க முடியாது. ஆனால், திராவிட மாடலில் மட்டும் தான், இனிய தமிழ் மொழியை முற்றிலுமாக புறக்கணித்து விட்டு, ஹிந்தி உட்பட மற்ற மொழிகளை படித்து, கல்லுாரி வரை முடிக்கும் வாய்ப்பை தி.மு.க உருவாக்கியது. இதனால் தான் தமிழ் மொழியே தெரியாத, தமிழை எழுத, படிக்க, பேச தெரியாத புதிய திராவிட சமூகம் உருவாகி இருக்கிறது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின், பிரதமர் மோடியால் ஏற்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்வி கொள்கை வாயிலாக தமிழ் கட்டாய பாடமாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏதோ எந்த பிரச்னையும் இல்லாதது போலவும், தமிழுக்கு மட்டும் தான் தனி பெரும் ஆபத்து திடீரென்று வந்து விட்டது போலவும், ஒரு மாய தோற்றத்தை ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். மக்கள் இன்னமும் அறியாமையில் தான் இருக்கின்றனர் என்ற அசட்டு நம்பிக்கையில் இருப்பதை, ஸ்டாலின் அறிக்கை உணர்த்துகிறது. தமிழர்களின் அடையாளமாகிய எங்கள் கோயில்களையும், எங்கள் தாய் மொழியாகிய தமிழ் மொழியையும் மக்களாகிய நாங்களே காப்பாற்றி கொள்கிறோம். தயவு செய்து கவலைக்கிடமாக இருக்கும் தங்கள் ஆட்சியையும், தமிழகத்தையும் கொஞ்சம் கவனியுங்கள்” என கூறியுள்ளார்.