விருதுநகர் மாவட்டம், சிவகாசி தனியார் கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசுகையில், “பாரதம் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறது. கல்வியிலும் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது சிறந்த தலைமையின் கீழ் நாம் செயல்படுகிறோம். அதன் பயனாக பல நல்ல திட்டங்கள் நமக்கு கிடைத்துள்ளன. முன்பை விட நம் நாட்டுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் உலக நாடுகள் வரிசையில் நம் நாடு அவ்வளாவு சிறப்பாக இல்லை. ஆனால், இப்போது அனைத்து நாடுகளும் நம் நாட்டை நம்பிக்கையுடன் பார்க்கின்றன. உலகில் சிறந்த மூன்றாவது நாடாக பாரதம் உள்ளது. மிகச் சிறந்த தலைமையே இதற்கு காரணம். இதன் காரணமாக கொரோனா காலத்திலும் தேசம் சிறப்பாக செயல்பட்டது. இன்று பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக உள்ளது. உலகத்திற்கு பாரதம் விரைவில் தலைமை ஏற்கும் நிலை வரும். நாடு வளர்ந்தால்தான் நாம் வளர முடியும். அயல் நாடுகளுக்கு சென்று ‘இந்தியன்’ என்று சொல்லும் போது, இதன் மதிப்பை நாம் நன்றாக உணர முடியும். வரும், 2047ல், நம் தேசம் சுதந்திரம் பெற்ற நுாற்றாண்டை நிறைவு செய்யும் நேரத்தில், அது முழுவதும் முன்னேறிய நாடாக இருக்கும். மற்ற நாடுகளில் இல்லாத அளவிற்கு கலாசாரத்தை பாரதம் கொண்டுள்ளது. நமது கலாசாரத்தை நாம் போற்றுவோம். ஆன்மிகத்திலும் சிறந்தது பாரதம் மட்டுமே” என பெருமிதம் தெரிவித்தார்.