விஜயதசமி நாளில் புதுமுனைவு

நவராத்திரி நாட்களில் மகேஷ்வரி, கௌமாரி, வராகி, மஹா லட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என சக்தியின் ஒன்பது வடிவங்களை வழிபட்டு வணங்கி உலக நலனை வேண்டி நின்றோம். நவ என்னும் ஒன்பது நாட்களோடு நவராத்திரி பண்டிகை முடிந்தாலும் தொடர்ந்து அடுத்த நாள் கொண்டாடப்படும் விஜயதசமி எனப்படும் தசராவும் முக்கிய நிகழ்வாகும்.

அம்பிகை துர்க்கையாக வடிவமெடுத்து மகிஷாசுரனுடன் போரிட்டு அந்த அரக்கனை வெற்றிவாகை சூடிய நாளே விஜயதசமியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சாகா வரம் எதிர்பார்த்து நான்முகனை நோக்கிக் கடும் தவம் மேற்கொண்ட மகிஷன் என்ற அசுரன், இறுதியில் தான் விரும்பிய வரத்தை பெற்றான். இவனது வரத்தின்படி, எந்த ஒரு மனிதரோ, தேவரோ, கடவுளோ, வேறு அரக்கரோ கொல்ல முடியாது. குறிப்பாகக் கருவில் உருவாகாத பெண்ணைத் தவிர யாராலும் தனக்கு இறப்பு வரக் கூடாது என்று வரத்தையும் பெற்றான்.

வரம் கிடைத்ததும் தன்னை யாரும் அழிக்க முடியாது என்ற ஆணவத்தில் அகில உலகையும் ஆட்டிப் படைத்தான். மகிஷாசுரனின் அழிவுச் செயல்கள் அதிகரித்த நிலையில் தேவர்கள், மும்மூர்த்திகளிடம் முறையிட்டனர். மும்மூர்த்திகளும் தங்களது சக்தியை ஒன்றாக்கி ஒரு பெண்ணைப் படைத்தனர். தேவர்கள் மற்றும் முனிவர்களின் வேண்டுதலுக்கு இணங்க தெய்வ சக்திகள் ஒன்று திரண்டு மஹா காளியாக உருவெடுத்து மகிஷாசூரனை அடக்கிக் காலில் போட்டு மிதித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் அவளுக்கு மகிஷாசூரமர்தினி என்ற பெயரும் உண்டு.

விஜயதசமியன்று நம்வீட்டு மழலைக் குழந்தைகளை முதன் முதலாகப் பாடசாலைகளில் சேர்க்கும் பழக்கம் உண்டு. அதே போலப் பாட்டு, இசைக் கருவி, நடனம் எனப் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்வதற்கு ஏற்ற நாளாக விஜயதசமி நாளைத் தேர்வு செய்கின்றனர். கூத்தனூர், செட்டிபுண்ணியம் கோயில்களூக்குச் சென்று முறையே கலைவாணி, ஹயக்ரீவர் போன்றோரை வழிபட்டுக் கல்வித் திட்டங்களைத் தொடங்கும் வித்யார்த்திகள் எண்ணிலடங்கா. விஜயதசமி நாளில் தொடங்கும் எந்த நல்ல செயலும் வெற்றி நல்கும் என்ற நம்பிக்கையே காரணம். கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவும் இந்நன்னாளில் புதிய திட்டங்களுக்கு அச்சாரம் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நிறுவப்பட்ட நாளும் விஜயதசமி அன்றுதான்.

ஆர். கிருஷ்ணமூர்த்தி

நன்றிகள்: நவராத்திரி குறித்த பல புராணத் தகவல்கள் மற்றும் தசரா விழாக் கொண்டாட்டங்கள் பற்றிய பல்வேறு தகவல்களை நமது விஜயபாரதம் மின்னிதழில் சுவைபட நல்கிய ஆர். கிருஷ்ணமூர்த்தி, விஜயபாரதம் வார இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர்களில் ஒருவர். சிறந்த ஆன்மீக உரையாளர், தன்னூக்கப் பயிற்சியாளர் எனப் பன்முகத் திறமைகளை ஒருங்கே பெற்றவர். அவருக்கு நமது நன்றிகள் பல.

மின்னிதழ் ஆசிரியர் குழு