12வது பாதுகாப்பு கண்காட்சி, குஜராத்தின் காந்தி நகரில் 2022 அக்டோபர் 18 முதல், 22 வரை நடைபெறவுள்ளது. செப்டம்பர் 27 வரை இந்த கண்காட்சியில் பங்கேற்க 1,136 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை 76,000 சதுர மீட்டரில் நடத்தப்பட்ட கண்காட்சியை தற்போது 1 லட்சம் சதுர மீட்டரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.’ பாதையில் இருந்து பெருமிதத்திற்கு’ என்பது இந்த கண்காட்சியின் மையப் பொருளாக இருக்கும். இந்த கண்காட்சி முதல் முறையாக பாரத நிறுவனங்களுக்காக மட்டுமே நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. ஏதாவது பாரத நிறுவனம் ஒன்றுடன் கூட்டு முயற்சியில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்களும் பாரத நிறுவனங்களாகவே கருதப்பட்டு இக்கண்காட்சியில் அனுமதிக்கப்படும். ஏற்கனவே இருந்த ராணுவ தளவாட தொழில் வாரியத்தால் உருவாக்கப்பட்ட 7 புதிய பாதுகாப்பு நிறுவனங்களும் இந்த ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்கும். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் அக்டோபர் 18,19,20 ஆகிய மூன்று நாட்கள் வணிகம் சார்ந்ததாக இருக்கும். அக்டோபர் 21 மற்றும் 22 பொது மக்கள் பார்வையிடுவதற்கானவை. முதல் முறையாக இந்நிகழ்வு 4 இடங்களில் நடைபெறவுள்ளது. மகாத்மா மந்திர் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் தொடக்கவிழாவும், கருத்தரங்குகளும் நடைபெறும். ஹெலிபேடு கண்காட்சி மையத்தில் கண்காட்சியும் நடைபெறும். பாதுகாப்பு தொழில்துறை உற்பத்தியில் சிறந்து விளங்குவோருக்கான பாதுகாப்பு அமைச்சர் விருதுகளும் இந்த கண்காட்சியின் போது முதன் முறையாக வழங்கப்படவுள்ளன. டெல்லியில் பாதுகாப்பு கண்காட்சி 2022க்கான ஏற்பாடுகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில் கண்காட்சிக்கு மேற்கொள்ளப்படும் விரிவான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விவரித்தனர். பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட், பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய்குமார் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் உயரதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.