கேரள மாநில போக்குவரத்து கழகம் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று செய்யப்பட்டது. அதில், ‛‛கேரளாவில் பி.எப்,.ஐ அமைப்பினர் திடீரென நடத்திய முழு அடைப்பு, வன்முறை போராட்டத்தின் காரணமாக மொத்தம் 58 பேருந்துகள் சேதமடைந்துள்ளன. பல பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் இந்த வன்முறைகளால் காயமடைந்துள்ளனர். பல இடங்களுக்கான பேருந்து சேவைகள் தடைப்பட்டன. ஏற்கனவே போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது. இந்த நிலையில், இவர்கள் நடத்திய முழு அடைப்பின் காரணமாக போக்குவரத்து கழகத்துக்கு ரூ. 5.06 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தொகையை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. பொதுவாக கேரளாவில் முழு அடைப்புக்கு 7 நாளுக்கு முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இந்த முழு அடைப்பு திடீரென்று நடத்தப்பட்டுள்ளது. இதனால் கேரள உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த வன்முறையில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நஷ்டத்தை வசூலிக்க வேண்டும். நஷ்ட ஈடு உத்தரவாதமின்றி அவர்களுக்கு ஜாமீன் கிடைக்காது என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.