தொடரும் தலைவர்கள் ஓட்டம்

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை துவங்கிய ஓரிரு நாட்களிலேயே கோவா காங்கிரசில் இருந்து அதன் எட்டு எம்.எல்.ஏக்கள் கூண்டோடு பா.ஜ.கவில் இணைந்தனர். இந்நிலையில், ராகுல் காந்தி கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் நுழைந்தவுடன் காங்கிரஸுக்கு இன்னொரு இழப்பு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் எர்ணாகுளம் மத்திய தொகுதி தலைவர் ராதாகிருஷ்ணன் பரப்புரம் என்பவர், காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வர்த்தகர் சங்கத்தின் மாவட்டத் தலைவர், காங்கிரஸின் ஓ.பி.சி பிரிவின் எர்ணாகுளம் மாவட்ட பொதுச் செயலர், ஆர் சங்கர் அறக்கட்டளையின் எர்ணாகுளம் மாவட்டச் செயலாலர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர். இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ராதாகிருஷ்ணன், “நாட்டில், மோடி அரசு செயல்படுத்தி வரும் வளர்ச்சி நடவடிக்கைகளினால் தான் பா.ஜ.க மீது எனக்கு ஈர்ப்பும் நம்பிக்கையும் ஏற்பட்டது. ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை மத்திய அரசை எவ்வகையிலும் பாதிக்காது. மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடும்போது, ​​பா.ஜ.க தனது தலைமை மற்றும் ஊழல் இல்லாமை குறித்து பெருமைப்படுகிறேன். மோடி அரசின் ஊழலற்ற பிம்பத்தால் ஈர்க்கப்பட்டேன். காங்கிரசில் பல பிரச்சனைகள் இருப்பதால் அவர்கள் நடைபயணம் செய்கின்றனர். நாட்டின் முன்னேற்றப் பயணத்திற்கு பா.ஜ.க தான் பொருத்தமானது. பஞ்சாப் முன்னாள் முதல்வர், காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜக.வில் இணைந்தது ஏன் என்பதை காங்கிரஸ் ஆராய வேண்டும்” என்று கூறினார்.