மத்திய அரசின் ‘ஜெம்’ இணையதளத்தின் புதிய அம்சங்கள், அதன் செயல்பாடுகள் குறித்து சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இடையே விழிப்புணர்வை உருவாக்குவதற்காக சென்னை சாஸ்திரி பவனில் விற்பனையாளர் மற்றும் ஊடகவியலாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விற்பனையாளர்களுக்கு இந்த தளம் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது என்பது குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் இது உதவியது. சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், புத்தொழில் நிறுவனங்கள் போன்ற விற்பனையாளர் குழுக்களுக்கு ஜெம் தளம் ஏராளமான வாய்ப்புகளை வழங்குவதுடன், மத்தி அரசின் மேக் இன் இந்தியா முன் முயற்சியை வலுப்படுத்துவதாக உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தமிழக அரசின் கருவூலங்கள் மற்றும் கணக்கு ஆணையர் விஜயேந்திர பாண்டியன், “2016ம் ஆண்டு முதல் ‘ஜெம்’ தளம் இயங்கி வருகிறது. 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. 2014ம் ஆண்டில் இருந்து இன்று வரை தமிழக அரசு ரூ. 1,108 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகளை ஜெம் தளம் மூலம் செய்துள்ளது. மாநிலத்தில் ரூ. 7,400 கோடிக்கும் அதிகமாக பரிவர்த்தனைகளை விற்பனையாளர்கள் மேற்கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். இதுபோன்ற விற்பனையாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் தமிழகத்திற்கு வெளியே உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட ஆகிய பல்வேறு மாநிலங்களில் வர்த்தகம் புரிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த தளத்தின் மூலம் மத்திய, மாநில அரசுகள்பொதுத்துறை நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யும் வாய்ப்புகளை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெற்றுள்ளன. சமுதாயத்தில் அனைவரையும் உள்ளடக்கும் வகையில் ஜெம் தளம், பட்டியலின, பழங்குடியின பிரிவினருக்கு பதிவு கட்டண விலக்கு அளிக்கிறது” என்றார். இதில், விற்பனையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் விளக்கப்பட்டன. செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை, “பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கேற்ப ஜெம் தளத்தின் பயன்கள் உள்ளது. தமிழகத்தில் இருந்து மேலும் அதிக விற்பனையாளர்கள் இந்த இ சந்தைதளத்தில் சேர்ந்து பயன்பெறும் வகையில், இந்த ஆன்லைன் தளம் குறித்த விழிப்புணர்வை கிராமப்பகுதிகளில் ஏற்படுத்த வேண்டும்” என ஊடகத்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.