தி.மு.க தலைவரான ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ள நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விலைவாசி ஏற்றம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வீட்டு வரி, தண்ணீர் வரிகள் உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, தி.மு.கவினரின் அராஜகம், ஹிந்து விரோத மனப்பான்மை போன்ற பலமுனை துன்பங்களால் அவரை நம்பி ஓட்டுப்போட்ட பொதுமக்கள் தங்கள் வாழ்வின் விடியலை மொத்தமாக இழந்து தவிக்கின்றனர். மின்சார கட்டணம் உயர்வு குறித்து தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளே குறைகூறி வருகின்றன. தி.மு.க.வின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூட, ‘தி.மு.க. அன்று சொன்னதை இன்று மாற்றிப் பேசுவது ஏற்புடையதல்ல. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனில், மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உண்டாகும்’ என கூறியுள்ளார். இந்நிலையில், தி.மு.க.வின் கூட்டணியில் உள்ள ஐ.ஜே.கே கட்சியின், நிறுவனர் பாரிவேந்தர், திருச்சியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பேசுகையில், “நான் சற்று அவசரப்பட்டு விட்டேன். போகாத இடத்துக்கு சென்றிருக்க வேண்டாம். தனியாக நின்றிருந்தால் கூட நிச்சயம் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருப்பேன். இதை நினைத்து வருந்துகிறேன். எம்.பி. பதவி எனக்கு பெரிது கிடையாது. எப்போது, வேண்டுமானாலும் ராஜினாமா செய்யலாம்” என தெரிவித்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு கூட, இதனிடையே, “எம்.பி. பதவி எனது அடையாளத்தின் சிறு துளி. இதற்காக, நான் போகாத இடத்திற்கு போய் இருக்க கூடாது. கூட்டணியில் சேர்ந்ததை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படுகிறேன்” என கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.