தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்த்தல், அவர்களுக்காக நிதி திரட்டுதல், சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இணைந்து ஒரே சமயத்தில் நாடு முழுவதும் அதிரடி சோதனைகளை நேற்று நடத்தினர். இதேபோல பி.எப்.ஐ அமைப்பின் அரசியல் முகமான எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்தவர்கள் வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை,மதுரை, தென்காசி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இதேபோல கேரளா, டெல்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, கோல்கட்டா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள பல்வேறு நகரங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த அதிரடி சோதனை நடைபெற்றது. இதில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் நூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சோதனை, கைதுகளை கண்டித்து பி.எப்.ஐ, எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். இவர்களை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர்.