செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அடுத்த மேல்ரோசாபுரம் பகுதியில், கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும், ‘டேஜங்மோபாட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்நிறுவனத்திற்கு சென்ற தாம்பரம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ராஜா, அங்குள்ள நிர்வாகிகளை மிரட்டி, ஆபாச வார்த்தைகளில் பேசிய ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவியது. எம்.எல்.ஏ., மிரட்டியது குறித்து, நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “எங்கள் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி, நிறுவனம் செயல்படும் இடத்தை வட மாநிலத்தவர் இருவருக்கு 2018ல் விற்று, கோடிக்கணக்கான ரூபாயுடன் தலைமறைவு ஆகிவிட்டார். அவர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. அப்போதே அடுத்த 10 ஆண்டுகளுக்கு இதே இடத்தில் நிறுவனம் வாடகைக்கு இயங்கும் என சம்பந்தப்பட்ட வட மாநிலத்தவர்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி வாடகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிறுவனத்திற்கு நேற்று வந்த தாம்பரம் தி.மு.க எம்.எல்.ஏ ராஜா நிறுவனத்தை காலி செய்ய வேண்டும் எனக்கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் மிரட்டல் விடுத்தார். எங்கள் நிறுவனத்தில் 12 நிரந்தர பணியாளர்களும் 108 ஒப்பந்த பணியாளர்களும் பணிபுரிகின்றனர். 120 குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவர ஆசைப்படுகிறார். இதை எதிர்த்து, தலைமைச் செயலகத்திற்கு ஊழியர்களுடன் சென்று போராடுவோம்” என்று கூறினார். இந்நிலையில் எம்.எல்.ஏ எஸ்.ஆர். ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் மறைமலைநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.