வசுதைவ குடும்பகத்தின் உண்மை தூதுவர்கள்

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் ‘பாரத அமெரிக்க புத்தொழில் சேது (SETU)’ (மாற்றம் மற்றும் தரம் உயர்த்தலுக்காக தொழில் முனைவோருக்கு ஆதரவளித்தல்) என்ற முன்முயற்சியை துவக்கிவைத்து பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “இத்திட்டம், பாரத, அமெரிக்க நிறுவனங்களுக்கு இடையே ஒரு பாலமாக செயல்படும். அமெரிக்காவில் வசிக்கும் பாரதியர்களின் வெற்றிப் பயணங்களை மேம்படுத்தி, தொழில்முனைவோரிடையே மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களின் தரத்தை உயர்த்த ஆதரவளிக்கும். பாரதத்தில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு நாடு ஆதரவளிக்கும். பாரதத்துடன் இணைந்து பணியாற்ற சர்வதேச அளவில் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். பாரதத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் அமைந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் ஆக்கபூர்வமான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தன்னிறைவு அடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாடு எடுத்து வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக பாரதம் மாறுவதற்கு வெளிநாடுகளில் வசிக்கும் பாரத மக்கள் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்க வேண்டும். அமெரிக்காவில் வசிக்கும் பாரத வம்சாவளியினர், ‘வசுதைவ குடும்பகம்’ (உலகமே ஒரு குடும்பம்) என்ற தத்துவத்தின் உண்மையான தூதர்களாக விளங்குகின்றனர். ‘பாரதம்’ என்பது வாய்ப்புகளைக் குறிக்கிறது. இது, பாரதத்துக்கு உகந்த தசாப்தம் அல்ல மாறாக இது பாரதத்துக்கான நூற்றாண்டு. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தலைசிறந்த நிர்வாகக் கொள்கைகளின் அடிப்படையில் பாரதத்தின் எதிர்காலத்திற்கான தமது தொலைநோக்குப் பார்வையையும், திட்டங்களையும் வெளிப்படுத்தி வருகிறார். பாரதம், தனது 100வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும்போது 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார நாடாக இருக்கும்” என கூறினார்.