காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்களிப்பவர்களின் பட்டியலை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என கார்த்தி சிதம்பரம், மணீஷ் திவாரி, சசிதரூர், ஆனந்த் சர்மா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். “காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிப்பவர்கள் பட்டியல் வெளியிடப்படாது, யாராவது வாக்காளர் பட்டியலை சரிபார்க்க விரும்பினால் மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு சென்று பார்த்துக்கொள்ளலாம், போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தால் அவர்களுக்கு பட்டியல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. கட்சியில் ஓட்டுரிமை பெற்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலை வெளிப்படையாக வெளியிடாமல் எப்படி நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்த முடியும்? யாராவது போட்டியிட விரும்பினால், வேட்புமனுவை 10 பேர் முன்மொழிய வேண்டும். கடைசியில், அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறி, வேட்புமனுவை நிராகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, வாக்களிப்பவர்கள் பட்டியலை காங்கிரஸ் இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று மணீஷ் திவாரி, கூறியுள்ளார். ஆனால் இந்த கோரிக்கையை கட்சி மேலிடம் நிராகரித்து உள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ‘வாக்களிப்பவர் பட்டியலை வெளியிடும் நடைமுறை காங்கிரசில் இல்லை. பழைய நடைமுறையை தொடர்ந்து பின்பற்றுவோம். இது ஒரு உள் நடைமுறை’ என்று தெரிவித்துள்ளார்.