சென்னை மதுரவாயலில் நடந்த இந்து முன்னணியின் நிகழ்ச்சியில் பேசிய திரைப்பட சண்டை பயிற்சியாளரும் இந்து முன்னணி பிரமுகருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோயில் முன்பு உள்ள பெரியார் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினார். அதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து கனல் கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை எழுப்பூர் நீதிமன்றமும் சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. அதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கனல் கண்ணன் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணையின்போது, கனல் கண்ணுக்கு ஜாமின் வழங்க காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, விசாரணை அதிகாரி முன்பு 4 வார காலத்திற்கு காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்று பேசமாட்டேன்’ என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.