ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு பணிகள், குடிநீர் வழங்கல் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் சுழற்சி போன்றவற்றுக்காக மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை மானியம் வழங்குகிறது. அவ்வகையில் நடப்பு நிதியாண்டில் முதல் தவணையாக தமிழகம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம், திரிபுரா, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரூ. 4,189.58 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், தமிழகத்துக்கு ரூ.1,380.50 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை மொத்தம் ரூ.15 ஆயிரத்து 705.65 கோடி மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை தெரிவித்து உள்ளது. நிதியமைச்சகம் விடுவிக்கும் இந்த நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு அந்தந்த மாநிலங்கள் 10 வேலை நாட்களுக்குள் வழங்கிட வேண்டும். தவறினால், தாமதம் ஆகும் நாட்களுக்கு வட்டியை கணக்கிட்டு அதையும் சேர்த்து மானியத்துடன் வழங்க வேண்டும் என நிதியமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.