நூருல் இஸ்லாம் சம்ஸ்காரிகா சங்கம் சார்பில் ஒரு வணிக கட்டிடத்தை மசூதியாக மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை கேரள உயர்நீதிமன்றம் விசாரித்தது. முன்னதாக, மனுதாரர் மசூதி கட்ட கோரிய பகுதியில் ஏற்கனவே 5 கி.மீ சுற்றளவில் சுமார் 36 மசூதிகளும் முஸ்லிம் பிரார்த்தனை கூடங்களும் உள்ளன என்பதால், மாவட்ட ஆட்சியர் அந்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தார். இதனை எதிர்த்துதான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன், “கேரள மாநிலம் கடவுளின் சொந்த தேசம். மத வழிபாட்டுத் தலங்கள் நிறைந்தது. ஆனால், அதிகப்படியான மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிரார்த்தனைக் கூடங்களால் நாங்கள் சோர்வடைகிறோம். அரிதான நிகழ்வுகளைத் தவிர வேறு எந்த புதிய மத ஸ்தலங்கள் மற்றும் பிரார்த்தனைக் கூடங்களை அனுமதிக்கும் நிலையில் நாங்கள் இல்லை. ஊரின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் முஸ்லிம்களுக்கு ஒரு மசூதி இருக்க வேண்டும் என்று புத்தகத்தில் எங்கும் எழுதப்படவில்லை” என்று கூறினார். மேலும் புனித குர்ஆனின் ஜுஸ் 10 சூரா 18 மற்றும் ஜுஸ் 1 சூரா 114 மற்றும் ரியாதுஸ்ஸாலிஹீனின் பிரிவு 1,064 ஆகிய வசனங்களையும் சுட்டிக்காட்டிய நீதிபதி, “மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்கள், முஸ்லிம் சமூகத்திற்கு மசூதியின் முக்கியத்துவத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. ஆனால் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பள்ளிவாசல் அவசியம் என்று மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களில் கூறப்படவில்லை. ஹதீஸ்களிலோ அல்லது திருக்குர்ஆனிலோ மசூதி ஒவ்வொரு முஸ்லிம் சமூகத்தினரின் வீட்டை ஒட்டி அமைய வேண்டும் என்று கூறப்படவில்லை. தூரம் என்பது அளவுகோல் அல்ல, ஆனால் மசூதியை அடைவது முக்கியம். இப்படி, ஹிந்து, கிறிஸ்தவர், முஸ்லிம், யூதர்கள், பார்சிகள் போன்ற ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுக்கு அருகில் மத ஸ்தலங்கள், பிரார்த்தனைக் கூடங்கள் கட்டத் தொடங்கினால், மத நல்லிணக்கச் சீர்கேடு உள்ளிட்ட கடுமையான விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும். 36 மசூதிகள் ஏற்கனவே கேள்விக்குரிய பகுதியில் இருப்பதால், அந்த பகுதியில் மற்றொரு மசூதி தேவையில்லை. கேரளா மிகச் சிறிய மாநிலம். பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியத்திற்கு உட்பட்டு, ஒவ்வொரு மதப் பிரிவினருக்கும் அல்லது அதன் எந்தப் பிரிவினருக்கும் மத மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக நிறுவனங்களை நிறுவவும் பராமரிக்கவும் உரிமை உண்டு என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 26(a) கூறுவது உண்மைதான். ஆனால், அதற்காக நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் மத வழிபாட்டுத் தலங்களைக் கட்ட வேண்டும் என்று அர்த்தமில்லை” என்று தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.