வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதி நவீன அதிவேக ரயில்களன வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், ராஜஸ்தானின் கோட்டா என்ற இடத்திலிருந்து மத்திய பிரதேசத்தின் நக்டா என்ற இடம் வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 120 கி.மீ முதல் 183 கி.மீ வரை இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. ஆனாலும், ரயில் பயணத்தில் எந்த குலுங்கலும் இல்லை. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ரயில் 183 கி.மீ வேகத்தில் செல்லும் போதும், ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே சிந்தவில்லை. உயர்தரமான பயணம், தண்ணீர் கிளாஸை பாருங்கள்” என குறிப்பிட்டிருந்தார். மேலும், ஸ்பீடோமீட்டர் செயலி உள்ள அலைபேசி படத்தையும், அருகில் தண்ணீர் நிரம்பிய ஒரு கிளாஸ் இருக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.