திரிபுராவின் கோமதி மாவட்டத்தில் உள்ள சர்போங் அமர்பூரில் உள்ள சாந்தி காளி கோயில் திறப்பு விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் கலந்துகொண்டு பேசுகையில், “அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் ஆக்கிரமிப்பு கொள்கைகளைப் போல இல்லாமல், பாரதம் உலகிற்கு சனாதன வாழ்க்கை முறையை, பிறர் மீது “பச்சாதாபம்” மற்றும் “பற்றை” வெளிப்படுத்துகிறது. அமெரிக்கா ஒரு வலுவான தேசமாக வளர்ந்தபோது, அது அதன் வலுவை மற்ற நாடுகள் மீது காட்ட விரும்பியது. ரஷ்யாவிலும் சீனாவிலும் இதே நிலைதான். ஆனால், ஒரு தேசமாகிய நாம், ஆதரவற்றவர்களுக்கு உதவுதல், பசித்தோருக்கு உணவளித்தல், பேதமின்றி அனைவருடனும் உறவாடும் தர்மத்தின் தத்துவத்தை உலகம் முழுவதற்கும் கற்பிக்கும் வகையில் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப விரும்புகிறோம்.
சனாதன தர்மத்தின் பாதுகாப்பிற்காக பாரதம் நிற்கிறது. நமது தத்துவத்தில், அனைவரையும் நம்மில் ஒரு பகுதியாகவே நாம் பார்க்கிறோம். மறுபுறம், முற்றிலும் எதிர் நம்பிக்கைகளை நம்பும் மற்றவர்களும் உள்ளனர். ஒற்றுமை இல்லாதபோது, சமூகம் போர், சுரண்டல், அநீதி, சுற்றுச்சூழலை அழித்தல் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகிறது. அவர்கள் பிறந்து வளர்ந்த மதிப்புகள் மற்றும் கலாச்சாரங்களைப் புறக்கணித்து, அவர்களின் நம்பிக்கைகளுக்கு ஏற்ப மக்களை மாற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள். பிரார்த்தனையின் வழி வேறுபட்டதாக இருக்கலாம். தெளிந்த உள்ளத்துடன் பிரார்த்தனை செய்தால், அது தெய்வங்களைச் சென்றடையும் என்று நாங்கள் நம்புகிறோம்.
பாரதத்தின் தர்மம் சனாதன தர்மம். அது அனைவரையும் தன் சொந்தம் என்று கருதுகிறது. எனவே அது எந்த வடிவத்திலும் யாருடைய வழிபாட்டையும் பற்றி கவலைப்படுவதில்லை. அது யாரையும் மதமாற்றம் செய்யாது. ஏனென்றால் ஒருவர் மனப்பூர்வமாக வழிபட்டால் அவர் யாரை வழிபடுகிறாரோ, அது அங்கு சென்றடையும் என்ற உண்மையை அது அறிந்திருக்கிறது. அதனால்தான், சனாதன தர்மத்தைப் பாதுகாக்கவும், அனைவரையும் தனக்குச் சொந்தமாக ஏற்றுக்கொள்ளவும் பாரதம் உருவானது.
இந்த நாடு பல படையெடுப்புகளைச் சந்தித்துள்ளது. ஆரம்பத்தில் சிக்கந்தர் (அலெக்சாண்டர்) போன்றவர்கள் நாட்டைக் கொள்ளையடிக்க வந்தனர். பின்னர் இஸ்லாம் வந்தது. இறுதியாக ஆங்கிலேயர்கள் நாட்டை ஆண்டனர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் மறைவதில்லை என்று ஆங்கிலேயர்கள் கூறுவார்கள், ஆகஸ்ட் 15, 1947ல் பாரதம் சுதந்திரம் அடைந்தபோது சூரியன் உண்மையில் பிரிட்டிஷ் பேரரசின் மீதிருந்து மறைந்துவிட்டது” என கூறினார். மேலும், தனது தர்மத்தைப் பாதுகாக்க தனது உயிரைக் கொடுத்த சாந்தி காளி மகாராஜையும் மோகன் பாகவத் பாராட்டி பேசினார்.