தொழில்நுட்பக் குழுவால் ஆய்வு செய்யப்பட்ட 29 அலைபேசிகளில் பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் கண்டறியப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், “இன்று நாம் பேச வேண்டிய நாள். காங்கிரஸ் ஒரு இடதுசாரிக் கட்சி, சுயமாக நிறுவப்பட்ட அறிவார்ந்த மற்றும் ஒரு அரசாங்க எதிர்ப்பு அமைப்பு, இது பெகாசஸ் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பெரும் சலசலப்பை உருவாக்கியது. அவர்கள் எங்கள் மீது தேசத்துரோக குற்றம் சாட்டியிருந்தார்கள். மழைக்கால கூட்டத்தொடரை நடத்த அனுமதிக்கவில்லை. இன்று எங்கள் நாள். அந்த அறிக்கைகளுக்குப் பிறகு ராகுல் காந்தி தற்போது என்ன சொல்கிறார் என்று கேட்க விரும்புகிறேன். ராகுல் காந்தி ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் இது தேசத்துரோக விவகாரம் என்று குற்றம் சாட்டினார். பிரதமர் தனது சொந்த கட்சியையும் எதிர் கட்சியையும் கண்காணிக்கிறார் என்று கூறியதற்கு ராகுல் காந்தி தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்பாரா? உலகின் பல்வேறு நாடுகள் பெகாசஸைப் பயன்படுத்துகின்றன. ஆனால் பாரதம் அதனை தவறாக பயன்படுத்துவதாக உலகம் முழுவதும் பரவலாகப் பேசப்படுகிறது. காங்கிரஸும், ராகுல் காந்தியும் பொய்களைப் பரப்புவதன் மூலம் தங்கள் கட்சியை விரிவுபடுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் உண்மை கண்டிப்பாக வெளிப்பட்டே தீரும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை” என்று கேள்வியெழுப்பினார்.