டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக சி.பி.ஐ பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. இதனால் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க பேரத்தில் ஈடுபடுவதாகவும் மிரட்டுவதாகவும் ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு பதில் அளித்த டெல்லி மாநில பா.ஜ.க, ‘டெல்லி அரசின் மதுபான ஊழலில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப கெஜ்ரிவால் கட்சி கடுமையாக முயற்சித்து வருகிறது. தங்கள் எம்.எல்.ஏ.க்களைத் தொடர்பு கொண்டதாகக் கூறப்படும் பா.ஜ.க நபர்களின் பெயர்களை கெஜ்ரிவால் வெளியிட வேண்டும். தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றால் பின்னர் ஏன் புதிய கலால் கொள்கையை திரும்பப் பெற்றனர். அதற்கான காரணம் குறித்து ஆம் ஆத்மி விளக்க வேண்டும்’ என ஆம் ஆத்மிக்கு சவால் விடுத்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்தார். ஆம் ஆம் கட்சியின் 62 டெல்லி எம்.எல்.ஏக்களும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர். அதன்படி, கெஜ்ரிவாலின் இல்லத்தில் நேற்று காலை 11 மணியளவில் கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் ஒரு டஜன் எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என ஆம் ஆத்மி கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்பு கொள்ள முடியாத சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட மறுத்த ஆம் ஆத்மி வட்டாரங்களில் ஒருவர், ”அவர்கள் முதலில் எங்களைத் தொடர்பு கொள்ளட்டும்” என்றார்.