பாரத நிறுவனங்களை நாடும் ரஷ்யா

உக்ரைனில் நடந்து வரும் மோதல்கள், ரஷ்ய பாதுகாப்புத்துறை தளவாட ஏற்றுமதி வருவாயையும் அந்த நாட்டின் ராணுவ தளவாட சொத்துக்களையும் பாதித்துள்ளது. மேலும், ரஷ்ய பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய சேவை உறுதிப்பாட்டை இதனால் நிறைவேற்ற முடியாத சூழல் நிலவுகிறது. சர்வதேச விநியோக வலைப்பின்னல் நெருக்கடியின் காரணமாக, ரஷ்ய பாதுகாப்புத் துறையானது தற்போது பாரத ஆயுதத் துறையின் பக்கம் திரும்பியுள்ளது. கூடுதலாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடைகள் காரணமாக, தெற்காசிய மற்றும் ஆப்பிரிக்க வாடிக்கையாளர்கள் ரஷ்ய தொழில்துறைகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட தயக்கம் காட்டுகின்றனர். எனவே, தங்கள் பாதுகாப்பு உபகரண வாடிக்கையாளர்களுக்கு பாகங்கள் மற்றும் சேவைகளை வழங்குமாறு பாரத நிறுவனங்களை ரஷ்யா கேட்டுக்கொண்டுள்ளது. பாரத பாதுகாப்புத்துறையில் இருந்து வரும் செய்திகளின் படி, ரஷ்யாவின் ஆயுதத் தொழிலுக்குப் பொறுப்பான ரஷ்ய பாதுகாப்புக் குழுமமான ரோஸ்டெக், அதன் பீரங்கி, டாங்கிகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பிற ஏற்றுமதிகளை வழங்குவது குறித்து பல பாரத நிறுவனங்களை இதற்காக தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆர்மர்ட் வெயிக்கில் நிகாம், அட்வான்ஸ்ட் வெப்பன்ஸ் & எக்யூப்மெண்ட் லிமிட்டெச், யந்திரா இந்தியா, க்ராஸ்னி டிபென்ஸ் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களும் இதில் அடக்கம். ரஷ்ய உபகரணங்களைப் பயன்படுத்துவதிலும், உற்பத்தி செய்வதிலும், சேவை செய்வதிலும் பாரதம் விரிவான, நீண்ட அனுபவத்தைக் கொண்டுள்ளன. கடந்த சில தசாப்தங்களாக, இந்த நிறுவனங்கள் ரஷ்ய நிறுவனங்களின் உரிமத்தின் கீழ் ரஷ்ய ராணுவப் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன. தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள ரஷ்ய வாடிக்கையாளர்களுக்கு உதவ பாரதம் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளது. உதாரணமாக, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் மலேசிய நாட்டில் சு 30 எம்.கே.எம் போர் விமானங்களை பராமரித்து சேவை செய்வதில் விருப்பம் தெரிவித்துள்ளது நினைவு கூரத்தக்கது.