தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் கணினி அறிவியல் பாடப் பிரிவில் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடு பாடங்கள் உள்ளன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கி, தொகுத்த புதிய பாடத்திட்டத்துடன் கூடிய இந்த பாடப் புத்தகங்களை திண்டுக்கல் ஐ. லியோனி தலைமையிலான தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம், திருத்திய பதிப்பாக 2020ல் வெளியிட்டுள்ளது. அந்த புத்தகம்தான் தற்போது மாணவ, மாணவிகளுக்கு நிகழும் கல்வியாண்டில் வழங்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்வழிப் பாடத்திட்டத்தில் கணினி அறிவியல், கணினி பயன்பாடு ஆகிய பாடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தகங்களில் பக்கத்துக்குப் பக்கம் ஏராளமான எழுத்துப் பிழைகளும், ஆங்கிலத்திலிருந்து கூகுள் மொழிபெயர்ப்பு தமிழில் செய்யப்பட்டதில் வார்த்தைப் பிழைகளும் உள்ளதால், ஆசிரியர்களும், மாணவர்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். உதாரணமாக, மல்டிமீடியா என்பதற்கு பல்லூடகம் என்பதற்கு பதிலாக பல் ஊடகம் என்றும், மல்டிமீடியம் என்றும் Raster Image என்பது செவ்வகப் படம் என தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. Arguments என்பது செயலுறுப்புகள் என்று கூறப்படுவதற்கு பதிலாக சில இடங்களில் அளபுருக்கள் என உள்ளன. Mode என்பதற்கு ஓரிடத்தில் முறைமை என்றும், மற்றொரு இடத்தில் முறை என்றும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது என ஆசிரியர்களும் மாணவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.