இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் குறிப்பாக, சிறு குறு கிராமங்கள் வரையில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளைக் கொண்டு செல்ல மிக முக்கியக் காரணமாக இருந்தது யூ.பி.ஐ சேவை தான். இந்நிலையில் யூ.பி.ஐ சேவை மீது கட்டணங்கள் விதிக்கும் திட்டம் குறித்து மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது. அதன்படி, யு.பி.ஐ சேவை பொதுமக்களுக்கு அபரிமிதமான வசதிகளை அளிப்பது மட்டும் அல்லாமல் நாட்டின் பொருளாதார உற்பத்தி ஆதாயங்களைக் உருவாக்கும் முக்கியக் கட்டமைப்பாக விளங்குகிறது. எனவே, யு.பி.ஐ சேவைகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்க அரசிடம் இப்போதைக்கு எந்தத் திட்டமும் இல்லை. அதே வேளையில் செலவுகளைக் கட்டுப்படுத்த மாற்று வழிகளை யோசிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என நிர்மலா சீதாராமன் தனது டுவீட்டில் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பேமெண்ட் எகோசிஸ்டம் மேம்பட, கடந்த ஆண்டு அரசு நிதியுதவி வழங்கியது, இதேபோல் இந்த ஆண்டும் அவ்வாறான கொடுப்பனவுகளை இச்சேவையை ஊக்குவிக்க நிதியுதவிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கியின் கணக்கீடுகளின் படி, நாம் ஒரு கடைக்காரருக்கு யு.பி.ஐ மூலம் ரூ. 800 செலுத்தினால், யூ.பி.ஐ கட்டமைப்பை இயக்கும் வங்கிகள், என்.சி.பி.ஐ மற்றும் பேமெண்ட் சேவை வழங்குபவர்கள் ஆகியோருக்கு சுமார் 2 ரூபாய் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். அதன்படி, என்.சி.பி.ஐ அமைப்பு இதற்காக ஒவ்வொரு மாதமும் சுமார் 1,250 கோடி ரூபாய் செலவு செய்து வருகிறது. இந்தச் செலவுகளை மத்திய அரசு நிதியுதவிகள் மூலம் தற்போது ஈடு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.