5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு கடிதம்

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், 5ஜிக்கான காத்திருப்பு முடிந்துவிட்டதாகவும், விரைவில் சேவைகள் தொடங்கப்படும். பாரதத்தில் உள்ள ஒவ்வொரு கிராமமும் டிஜிட்டல் முறையில் இணைக்கப்படும் என்றும் கூறினார். இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறும் இந்திய மொபைல் காங்கிரஸ் (ஐ.எம்.சி) மாநாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 5ஜி சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைக்க உள்ளார் என்று சில ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு கடிதங்கள் ஏலத்தில் பங்கெடுத்த நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதாக ‘கூ’ சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மத்திய அரசு, 5ஜி அலைக்கற்றையை ஜியோ, ஏர்டெல், அதானி குழுமம் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்தது. பார்தி ஏர்டெல் இந்த மாத இறுதிக்குள் 5G ஸ்பெக்ட்ரத்தை வெளியிடத் தொடங்கும், மார்ச் 2024க்குள் அனைத்து நகரங்கள் மற்றும் முக்கிய கிராமப்புறங்களில் சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல ஜியோவும், 5ஜி டெலிகாம் சாதனங்களின் சோதனை முடிந்ததும் முதல் 1,000 நகரங்களில் 5ஜி கவரேஜை துவங்க திட்டமிட்டு வருகிறது.