ராஜஸ்தானில் உள்ள பரன் அத்ரு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான பானா சந்த் மேக்வால் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேக்வால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், “எனது சமூகத்தின் உரிமைகளை நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் பாதுகாக்க முடியாததால், எனக்கு இனியும் எம்.எல்.ஏவாக தொடர உரிமையில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகரித்து வரும் பட்டியலின பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. சமீப காலமாக பட்டியலின பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இந்த வன்கொடுமைகளுக்கு எதிரான வழக்குகள் நீதித்துறை நடவடிக்கைகளில் சிக்கி, கோப்புகள் ஒரு மேசையில் இருந்து மற்றொரு மேசைக்கு மெல்ல நகர்ந்து வருகின்றன. எனவே என் பதவியை ராஜினாமா செய்கிறேன். எந்தப் பதவியும் இல்லாமல் என்னால் சமூகத்துக்குச் சேவை செய்ய முடியும்” என தெரிவித்துள்ளார். சமீபத்தில், ராஜஸ்தானில் உள்ள ஜலோரில் 9 வயது பட்டியலின சிறுவன் தண்ணீர் பானையைத் தொட்டதாகக் கூறி பள்ளி ஆசிரியரால் அடித்துக் கொல்லப்பட்டதை அடுத்தே இவர் இந்த ராஜினாமா முடிவை எடுத்துள்ளார். குழந்தையைத் தாக்கிய ஆசிரியர் சைல் சிங் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கொலை மற்றும் வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.