சுதந்திர தினத்தை முன்னிட்டு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் திரளான மக்கள் தேசிய கொடியை ஏந்தியவாறு லலித் காட் பகுதியில் இருந்து தாவரவியல் பூங்கா வரை நடந்து சென்றனர். முன்னதாக ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பேசுகையில், “கடந்த 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மகாத்மா காந்தி எழுச்சிமிகு உரையாற்றினார். அவரது உரையால் நாடு முழுவதும் தேசப்பற்று பொங்கி எழுந்தது. தேசத்தந்தை, நாட்டுக்காக உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூர்ந்து ஸ்ரீநகரில் பேரணி நடத்துகிறோம். இப்போது 75வது ஆண்டு சுதந்திர தின நிறைவு விழாவை கொண்டாடுகிறோம். அடுத்த 25 ஆண்டுகளில் 100வது சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடுவார்கள். காஷ்மீர் வீடுகளில் பாகிஸ்தான் கொடி பறந்ததாக கூறப்படுவது கடந்த கால வரலாறு. இப்போது ஜம்மு காஷ்மீர் முழுவதும் வீடுகள்தோறும் தேசியக் கொடி பறக்கிறது. காஷ்மீர் மக்கள் தேசப்பற்றுடன் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றனர். புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. வரும் 2047ம் ஆண்டில் ஒளிமயமான காஷ்மீர் உருவாகும். பயங்கரவாதத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். சிலர் தங்களது சுயலாபத்துக்காக பயங்கரவாதத்தை தூண்டி வருகின்றனர். இதை அனுமதிக்க மாட்டோம். அடுத்த ஓராண்டில் காஷ்மீரில் இருந்து பயங்கரவாதம் முழுமையாக வேரறுக்கப்படும். புதிய தலைமுறை காஷ்மீர் இளைஞர்கள் வளமான வாழ்க்கையை தொடங்குவார்கள்” என்று பேசினார்.