எம்.எஸ்.எம்.இ’க்களுக்கான திட்டங்கள்

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணையமைச்சர் பானுபிரதாப் சிங் வர்மா, “நாட்டிலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையை மேம்படுத்த தற்சார்பு பாரதம் திட்டத்தின்கீழ் அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதில் இரண்டு பெரிய திட்டங்களை கூறலாம். முதலாவதாக, ‘அவசரகால கடன் உத்தரவாத திட்டம்’. இது, கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டும் வணிகத்தைத் தொடங்கவும், செயல்பாட்டுக்கான செலவை எதிர்கொள்ளவும் தகுதிவாய்ந்த எம்.எஸ்.எம்.இ’க்களுக்கும் மற்ற வணிக நிறுவனங்களுக்கும் உதவிசெய்ய தற்சார்பு பாரதம் திட்டத்தின் ஒருபகுதியாக மே 2020ல் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் 2023 மார்ச் 31 வரை செல்லுபடியாகும். அடுத்ததாக, ‘தற்சார்பு பாரதம் நிதியம்’. இதனை வளர்ச்சியடைவதற்கான ஆற்றலையும், சாத்தியத்தையும் கொண்டுள்ள எம்.எஸ்.எம்.இ’க்களின் சமபங்கு நிதியை கொண்டு வருவதற்காக மத்திய அரசு அறிவித்தது. மேலும், 03.08.2022 அன்றைய நிலவரப்படி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் இணையப்பக்கத்தில், பதிவு செய்யப்பட்டுள்ள மொத்தம் 99,58,903 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில், மகளிரால் பதிவு செய்யப்பட்டவை மட்டும் 17,96,408 தொழில் நிறுவனங்கள் ஆகும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகம், பிரதமரின் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் மற்றும் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் ஆகிய இரண்டு கடன் திட்டங்களை செயல்படுத்துகிறது. அதில், பிரதமரின் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவரை, மொத்தம் 2,50,319 பெண் தொழில் முனைவோர்களுக்கு உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை மொத்தம் 11,92,689 மகளிருக்கு கடன் உத்தரவாதத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, தற்சார்பு பாரதத்தின், பிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்டம், தெருவோர வியாபாரிகளுக்கான இலவசக் கடன் உதவியை எளிதாக்குகிறது. கடன் உத்தரவாத திட்டம், கடன் வழங்கும் முறையை எளிதாக்கவும், குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் வசதியை எளிதாக்கவும், பிணையத்தொகை மற்றும் இடைத்தரகர் உள்ளிட்ட பிரச்சினைகளின்றி அதிகபட்சமாக ரூ. 200 லட்சம் வழங்கப்படுகிறது” என தெரிவித்தார்.